ஒடுகத்தூர் அருகே சுடுகாட்டு ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தி பட்டாசு வெடி விபத்தில் பலியான பெண்ணின் சடலம் வாங்க உறவினர்கள் மறுப்பு: டிஎஸ்பி, ஆர்டிஓ, தாசில்தார் பேச்சுவார்த்தையில் சமரசம்
ஒடுகத்தூர், அக்.23: ஒடுகத்தூர் அருகே பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவரின் கிராமத்தில் சுடுகாட்டு ஆக்கிரமிப்பை அகற்றினால் மட்டுமே உடலை வாங்குவோம் என உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து வேப்பங்குப்பம் காவல்நிலையத்தில் டிஎஸ்பி, ஆர்டிஓ, தாசில்தார் தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு- அப்புக்கல் சாலையோரம் டிஎஸ்பி அலுவலகம் எதிரே ஹரிபிரசாத் என்பவர் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை குடோன் நடத்தி வருகிறார். இந்த குடோனில் ஒடுகத்தூர் அருகே உள்ள வண்ணந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த காயத்ரி(41), சங்கீதா ஆகிய இருவரும் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயத்ரி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியானார். மேலும் சங்கீதா பயங்கர தீ காயங்களுடன் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், காயத்ரியின் உடற்கூறாய்வு நேற்று நடந்து முடிந்தது. பின்னர் சடலத்தை அவரது உறவினர்களிடம் அதிகாரிகள் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து விட்டனர். இதுதொடர்பாக நேற்று வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் டிஎஸ்பி நந்தகுமார் தலைமையில், ஆர்டிஓ சரவணன் (பொறுப்பு), தாசில்தார் மகேஸ்வரி, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு யாரேனும் இறந்து போனால் ஊர் எல்லையில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்து வருகிறோம். ஆனால் ஓடை புறம்போக்கில் உள்ள இந்த சுடுகாட்டை சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயிர் செய்து வருகின்றனர். இதனால் சடலங்களை எடுத்து சென்றால் எங்களிடம் பிரச்னை செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி எங்களுக்கு எரிமேடை, காரிய மேடை என்று எதுவும் கிடையாது. இதனால் சாலையில் தான் இறந்தவர்களுக்கு அனைத்து சடங்குகளை செய்து வருகிறோம். எனவே எங்கள் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு சுடுகாட்டை அகற்றி கொடுக்க வேண்டும். மேலும் தலைமறைவாக உள்ள பட்டாசு குடோனின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை நாங்கள் வாங்க மாட்டோம்’ என்றனர்.
அதற்கு அதிகாரிகள், ‘இன்னும் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட சுடுகாட்டை முழுவதும் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஹரிபிரசாத்தை தீவிரமாக தேடி வருகின்றோம். அவரை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுப்போம்’ என்றனர். தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிகாரிகள் அளித்த உறுதியை ஏற்ற உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனர். பின்னர், வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து கொண்டுவரப்பட்ட சடலத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மாலை சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.


