மும்பையில் இருந்து வாங்கி வந்து வேலூரில் சப்ளை: போதை மாத்திரைகள் விற்பனைக்கு வைத்திருந்த 3 பேர் கைது
வேலூர், அக்.23: மும்பையில் இருந்து போதை மாத்திரைகள் வாங்கி வந்து வேலூரில் விற்பனைக்கு வைத்திருந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். வேலூர் ஆர்.எஸ் நகரில் போதை மாத்திரை விற்பனை நடைபெறுவதாக வேலூர் தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் ஓட்டேரி இந்திரா நகரை சேர்ந்த தனுஷ்(23), பாகாயம் என்.கே நகரை சேர்ந்த விஜய்(22) மற்றும் வேலூர் ஆர்.எஸ் நகரை சேர்ந்த விஷ்ணு(18) ஆகியோர் என தெரிய வந்தது.
தொடர்ந்து அவர்களை சோதனை செய்தபோது போதை மாத்திரைகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 35 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்த பாகாயம் பகுதியைச் சேர்ந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பாகாயத்தைச் சேர்ந்தவர் மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வருவதாகவும், அவர்களிடமிருந்து நாங்கள் வாங்கி, நண்பர்கள் மற்றும் பயன்படுத்துவோருக்கு விற்பனை செய்வதாகவும் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.


