அணைக்கட்டில் வெடி விபத்தில் பெண் பலி; பட்டாசு தயாரிப்பு குடோனிற்கு சீல்: பலியான பெண் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் முதல்வர் நிவாரணம்
அணைக்கட்டு, அக். 23: அணைக்கட்டில் வெடிவிபத்தில் பெண் பலியானதால் பட்டாசு தயாரிப்பு குடோனிற்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், பலியான பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத் (33). இவர் பட்டாசு கடை மற்றும் பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலை வைத்துள்ளார். நேற்று முன் தினம் காலை பட்டாசு தொழிற்சாலையில் உள்ள குடோனில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு அறையில் வெடி விபத்து ஏற்பட்டு தீ பிடித்தது. இதில் ஒடுகத்தூர் அடுத்த கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளி காயத்ரி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவருடன் பணியிலிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த சங்கீதாவிற்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக அணைக்கட்டு விஏஓ மணிகண்டன் அணைக்கட்டு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான குடோன் உரிமையாளர் ஹரிபிரசாத்தை மூன்று தனிப்படையில் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
வெடி விபத்தில் பெண் உயிரிழந்ததை தொடர்ந்து தொழிற்சாலையின் உரிமத்தை ரத்து செய்து டிஆர்ஓ சுரேஷ் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து தாசில்தார் மகேஸ்வரி மற்றும் வருவாய்த்துறை என நேற்று முன்தினம் இரவு அந்த பட்டாசு குடோனை பூட்டி சீல் வைத்தனர். இந்நிலையில் வெடி விபத்தில் பலியான காயத்ரியின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியாக ரூ.4 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சங்கீதாவிற்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.


