Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கே.வி.குப்பத்தில் நடந்த ஆட்டுச்சந்தையில் விற்பனை அமோகம்: போட்டி போட்டு வாங்கிய வியாபாரிகள்

கே.வி.குப்பம், ஜூன் 23: கே.வி.குப்பத்தில் நடந்த ஆட்டுச்சந்தையில் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கியதால் விற்பனை அமோகமாக நடந்தது. கே.வி.குப்பத்தில் திங்கள் கிழமை தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். மாவட்டத்தில் பிரபலமான ஆட்டுசந்தைகளுள் ஒன்றான இந்த ஆட்டுச்சந்தையில் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட விழா காலங்களில் சந்தைகள் களைகட்டும். புரட்டாசி மாதம், உட்பட சில நாட்களில் நடைபெறும் சந்தைகள் மந்தமாகவே இருக்கும். தொடர்ந்து சில வாரங்களில், விற்பனை மந்தமாகவும், களைகட்டுவது என்று மாறி மாறி நடைபெறும்.

இந்நிலையில் திங்கள் கிழமையான நேற்று வழக்கம்போல் சந்தை கூடியது. இதில் கே.வி.குப்பம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும், காட்பாடி, குடியாத்தம், வேலூர், அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் இருந்தும், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், உள்ளிட்ட அருகிலுள்ள உள்ள மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்தும், நூற்றுக்கணக்கான ஆடுகள், இறைச்சிக்காக வெட்டப்படும் ஆடுகள், வளர்பதற்காக வாங்கும் ஆடுகள், என ஆடுகளை ஜோடி, ஜோடியாகவும் வாங்குபவர்கள் என பல்வேறு கிராமங்களில் இருந்து வந்தனர்.

மேலும், தற்போது கோயில் திருவிழா சீசன் என்பதால், நேற்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ஆடுகள் வர்த்தகம் அமோகமாக விற்பனையானது. அதுமட்டுமின்றி ஆடுகளின் விலை கூடுதலாக இருந்தாலும், அதனை வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை அதிகவிலை கொடுத்து வாங்கி சென்றனர். இதனால், ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.