Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஆற்காடு அருகே அரசு பஸ் தீயில் கருகிய சம்பவம்; பணியில் கவன குறைவாக இருந்ததாக மேலாளர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்: அதிகாரிகள் தகவல்

வேலூர், மே 22: ஆற்காடு அருகே அரசு பஸ் தீ விபத்தில் பணியில் கவன குறைவாக இருந்ததாக கிளை மேலாளர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் அரசு போக்குவரத்து மண்டலத்தின் கீழ் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 700க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த 15ம் தேதி ஆற்காடு பஸ் நிலையத்தில் இருந்து தடம் எண் 37 என்ற கட்டணமில்லா மகளிர் இலவச பஸ், சக்கரமல்லூர் அடுத்த அண்ணா நகர் அருகே சென்றபோது, திடீரென இன்ஜினில் இருந்து புகை ஏற்பட்டு, தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். தீ விபத்தால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்தப்படி இறங்கி ஓடினர். தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் அரசு பஸ் முழுவதும் கருகி நாசமானது. இதற்கிடையில், தீ விபத்து குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், பேட்டரி ஒயர் கனெக்‌ஷன் சரியில்லாததால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஆற்காடு பணிமனையில் இருந்த தொழில்நுட்ப பணியாளர்கள் 3 பேர், ஆற்காடு பணிமனை கிளை மேலாளர் ஆகிய 4 பேர் பணியின்போது கவன குறைவாக செயல்பட்டதாக கூறி நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், பணிமனையில் இருந்து செல்லும் அனைத்து பஸ்களும் சரியான முறையில் இயக்கப்படுகிறதா? என ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.