Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத 32,014 மாணவர்கள் துணைத்தேர்வு எழுத விண்ணப்பிக்க நடவடிக்கை: பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

வேலூர், மே 22: பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத 32,014 மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க, அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான (2025-2026ம்) பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் கடந்த 8ம்தேதி வெளியானது. இதில் மாநிலம் முழுவதும் 95.20 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வரும் ஜூன் 29ம்தேதி முதல் துணைத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்ச்சி பெறாத பிளஸ் 2 மாணவர்கள், துணைத்தேர்வு எழுத கடந்த 18ம்தேதி முதல் பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நடப்பாண்டு பிளஸ் 2 தேர்வுக்கு வராத மற்றும் தேர்ச்சி பெறாத 32,014 அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாதிரிப்பள்ளிகள் உறுப்பினர் செயலர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள், அனைவருக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்தொடர்ச்சியாக, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வெழுதாத மாணவர்கள், துணைத்தேர்விற்கு கடந்த 18ம் தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றனர். வரும் 30ம் தேதி வரையிலும், அதற்குள் விண்ணப்பிக்க தவறும் மாணவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் வரும் 1, 2ம் தேதிகளில் காலை 11 மணி முதல் மாலை 5 வரை தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க தலைமையாசிரியர்கள் வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.

அரசு தேர்வுகள் இயக்கக தரவின்படி 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் 26,846 மாணவர்களும், தேர்வெழுதாமல் 5,168 மாணவர்களும் என 32,014 பேர் உள்ளனர். இம்மாணவர்கள் துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்க குறுகிய கால இடைவெளி மட்டுமே உள்ளது. எனவே, மாவட்ட வாரியாக பட்டியலில் வழங்கப்பட்டுள்ள மாணவர்கள் அனைவரும் துணைத்தேர்விற்கு விண்ணப்பித்து தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக உரிய வழிகாட்டுதல்கள் வழங்கிட சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்திடுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், துணைத் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை தலைமையாசிரியர்களின் வாயிலாக எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும். இதேபோல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளி வந்த பிறகு, அந்த மாணவர்களுக்கும் வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.