Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குடியாத்தம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக ரூ.10 கட்டாய வசூல்: மதுப்பிரியர்கள் வேதனை

குடியாத்தம், மே 20: குடியாத்தம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக 10 ரூபாய் கட்டாய வசூல் செய்யப்படுவதால் மதுப்பிரியர்கள் வேதனையடைந்துள்ளனர். தமிழகத்தில் புதிய அரசு அமைந்த உடனே, வேலூர் மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் மூலம் குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கும் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை விட பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்றால், சம்பந்தப்பட்ட கடை ஊழியர்கள் உடனடியாகச் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என குறிப்பிட்டிருந்தது.

ஆனால், குடியாத்தம் அம்பேத்கர் சிலை அருகில் உள்ள டாஸ்மாக் கடை, பாக்கம், மொரசப்பள்ளி, பொன்னம்பட்டி ஆகிய டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர்கள் பாட்டிலுக்கு ₹10 கூடுதலாக வசூலித்து வருகின்றனர். இதுகுறித்து குடியாத்தம் மதுப்பிரியர்கள் சமூக வலைத்தளங்களில் அவர்களின் ஆதங்கங்களை வெளியிட்டு வருகின்றனர். இது குடியாத்தம் பகுதியில் தவெக நிர்வாகிகள் உள்ள வாட்ஸ் அப் குழுவில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. அதில் முறைகேடு செய்யும் ஊழியர்கள் மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். கடந்த தேர்தல் பிரசாரத்தில் விஜய் வாக்கு சேகரித்தபோது பாட்டிலுக்கு 10 ரூபாய் என பாடல் பாடி விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் அவரது ஆட்சியிலும் அதே பாடலை பாடும் நிலைமை ஏற்பட்டு உள்ளது. எனவே இதனை தடுக்க குடியாத்தம் பகுதிக்குட்பட்ட கடைகளில் அதிகாரிகள் தொடர்ந்து ரகசிய மற்றும் அதிரடி கள ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது மது பிரியர்களின் கோரிக்கையாக உள்ளது. ஒவ்வொரு கடையிலும் ஒரு நாளைக்கு சுமார் 1200 முதல் 1500 பாட்டில்கள் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதில் தலா ஒரு பாட்டிலுக்கு ரூ.5, ரூ.10 என கூடுதலாக வசூல் செய்யப்படுகிறது. அதில் கடை விற்பனையாளருக்கு ஒரு நாளைக்கு ரூ.6000 முதல் ரூ.12 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது. நாள் ஒன்றுக்கு அரசுக்கு சுமார் ரூ.1 லட்சம் முதல் ரூ.2.50 லட்சம் வரை வியாபாரம் நடைபெறுகிறது.

அதிகாரிகள் கட்டாய வசூல்

இதுகுறித்து டாஸ்மாக் கடை விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், ‘கூடுதல் பணம் வசூலிக்க கூடாது என சர்க்குலர் வந்திருந்தாலும், கடைகளுக்கு மொத்தமாக அனுப்பப்படும் பாட்டில் எண்ணிக்கைக்கு ஏற்ப, வசூல் செய்யப்பட்ட கூடுதல் தொகையை கணக்கு போட்டு அதிகாரிகள் அதில் ஒரு பங்கு கட்டாயம் வசூல் செய்கின்றனர். இதனால் தான் நாங்களும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வேண்டி உள்ளது. அதிகாரிகள் தலையீடு இல்லை என்றால் நாங்கள் ஏன் கூடுதல் பணம் கேட்கிறோம்’ என்றார்.