Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வேலூர் பழைய பாலாற்று மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல்; ஆந்திராவில் இருந்து தென்னைமர கள் கொண்டு வந்து விபத்தில் சிக்கிய வாலிபர்கள்:  சோதனைச்சாவடியில் கண்காணிக்காத போலீசார்

வேலூர், ஜூலை 20: ஆந்திராவில் இருந்து தென்னைமர கள் கொண்டு வந்து விபத்தில் சிக்கிய வாலிபர்களால் வேலூர் பழைய பாலாற்று மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் தமிழக- ஆந்திரா எல்லை மாவட்டமாக இருந்து வருகிறது. ஆந்திராவில் அதிக அளவில் தென்னைமர கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கள் குடிப்பதற்காக வாரந்தோறும் ஞாயிற்றுகிழமைகளில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த குடிமகன்கள் ஆந்திராவுக்கு படையெடுத்து செல்கின்றனர். அங்கிருந்து கள் குடித்துவிட்டும், பாட்டில்கள், பிளாடிக் கேன்களில் வாங்கியும் வருகின்றனர். இதனால் அங்கு வியாபாரம் களைக்கட்டுகிறது.

இந்நிலையில் வேலூரை சேர்ந்த இரு வாலிபர்கள் நேற்று காலை 9.30 மணியளவில் ஆந்திராவிற்கு சென்று தென்னங்கள் வாங்கிக் கொண்டு பைக்கில் வேலூரை நோக்கி வந்துள்ளனர். அப்போது வேலூர் செல்லியம்மன் கோயில் பழைய பாலாறு மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது நிலைத்தடுமாறி பக்கவாட்டில் உள்ள இரும்பு கம்பிகள் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனால் பாலாறு மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்த வந்த வேலூர் வடக்கு போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்துக்குள்ளான பைக்கில் இருந்த தென்னங்கள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆந்திராவில் இருந்து வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலூர், காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பைக்குகள் மற்றும் கார்களில் சென்று தென்னங்கள் வாங்கிக் கொண்டு, குடித்துவிட்டு வருகிறார்கள். காட்பாடி சோதனைச்சாவடியில் கண்காணிக்க வேண்டிய போலீசார் இதனை கண்டும் காணாமலும் இருந்து வருகின்றனர். மதுவிலக்கு போலீசாரும் கண்டுகொள்ளாத நிலை தொடர்கிறது. இதனால் தங்கு தடையின்றி ஆந்திராவில் இருந்து தென்னங்கள் கொண்டு வருவது நாளுக்கு அதிகரித்து வருகிறது.

அதோடு கள் குடித்துவிட்டு வரும் போதை ஆசாமிகளால், விபத்துக்கள் அதிகரிக்க தொடங்கிவிட்டது. போதையில் வருபவர்கள் விபத்தில் சிக்குவதுமட்டுமின்றி, அவர்களால் சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி படுகாயமடைவதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே போதையில் பைக், கார் ஒட்டும் நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும். ஓட்டுனர் உரிமத்தை ஓராண்டுகாலம் ரத்து செய்ய வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.