முதலீடு செய்தால் அதிக லாபம் எனக்கூறி ஆன்லைன் மூலம் ரூ.1.42 கோடி மோசடி: வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வாலிபர் புகார்
வேலூர், செப்.18: தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் என கூறி குடியாத்தம் வாலிபரிடம் ஆன்லைன் மூலம் ரூ.1.42 கோடி மோசடி செய்துள்ளதாக வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
வேலூர் எஸ்பி அலுவலகத்தில் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எனக்கு பேஸ்புக் ஆன்லைன் செயலி மூலம் ஒரு பெண் அறிமுகமானார். அவர் பல்வேறு தொழில்கள் செய்து வருவதாகவும், அந்தத் தொழிலில் தனக்கு அதிக லாபம் வருவதாகவும் கூறினார். இதில் நீங்கள் பங்குதாரராக சேர்ந்தால் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். நான் வெளிநாட்டு டாலரில் தொழில்கள் செய்து வருகிறேன் என்று பல்வேறு விதங்களில் என்னிடம் பேசினார்.
இதை நம்பி அவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலீடு செய்வதாக கூறினேன். அதற்கு அவர் பெங்களூர் பேஷன் டிசைனிங் என்ற பெயரில் பெரிய தொழில் செய்து வருகிறேன். அதுவும் பகுதி நேரமாக தான் பணியாற்றி வருகிறேன் என்று கூறினார். இதையடுத்து அவர் பல்வேறு நபர்களின் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்புமாறு என்னிடம் கூறினார். இதை நம்பி நான் நகைகளை விற்றும், பலரிடம் கடன் வாங்கியும் ரூ.20 லட்சம், ரூ.30 லட்சம் என பல்வேறு தவணைகளில் வங்கி மூலம் பணத்தை செலுத்தி வந்தேன்.
இதையடுத்து அவரிடம் நான் லாபம் தருமாறு கூறினேன். அதற்கு அவர் தற்போது தொழில் புதிய முறை புகுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்களுக்கு பணம் செலுத்திய உடன் 24 மணி நேரத்தில் பணம் திரும்ப கிடைத்துவிடும். இதற்கு 20 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறினார். மேலும் அவர்கள் அடிக்கடி என்னிடம் வாட்ஸ் அப் போன்ற ஆன்லைன் செயலி மூலம் அடிக்கடி தொடர்பு ஏற்படுத்தி வந்தனர்.
நீங்கள் இதுவரை செலுத்திய தொகை முழுவதும் கிடைக்க மீண்டும் பணம் செலுத்த வேண்டும் என்று கூறினார். இதையடுத்து மீண்டும் பணம் செலுத்தினேன். இவ்வாறு மொத்தம் ரூ.1.42 கோடி ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி விட்டேன். அவர்களிடம் இருந்து இதுவரை எனக்கு எந்த பணமும் மீண்டும் திரும்பி வரவில்லை. என்னை அந்தப் பெண் மற்றும் அவர்களுடன் சேர்ந்த நபர்கள் மோசடி செய்து விட்டனர். எனவே அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


