Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பேரணாம்பட்டிலிருந்து சேலத்திற்கு 25 பயணிகளுடன் சென்ற அரசு பஸ் டிரைவர் மாரடைப்பு ஏற்பட்டு பலி

குடியாத்தம், செப். 18: பேரணாம்பட்டிலிருந்து சேலத்திற்கு 25 பயணிகளுடன் சென்ற, அரசு பஸ் டிரைவருக்கு, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு பலியானார். உடனே பஸ்சை நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பணிமனையில் இருந்து பேரணாம்பட்டில் இருந்து சேலம் செல்லும் அரசு விரைவு பஸ் நேற்று காலை 25 பயணிகளுடன் சேலம் நோக்கி புறப்பட்டது. பஸ்சை காட்பாடி அடுத்த கழிஞ்சூரைச் சேர்ந்த டிரைவர் வெங்கடசாமி (59) என்பவர் ஓட்டிச் சென்றார். பஸ் குடியாத்தம் கெங்கையம்மன் புதிய பாலம் அருகே வந்தபோது டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

மாரடைப்பை உணர்ந்த டிரைவர், உடனடியாக பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். அடுத்த நொடியே அவர் பஸ் ஸ்டேரிங் மீது மயங்கி விழுந்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகளும், சாலையில் சென்றுகொண்டிருந்த பொதுமக்களும், மயங்கிக்கிடந்த வெங்கடசாமியை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் வெங்கடசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு பேபி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த குடியாத்தம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பணியின்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதும் பஸ்சை உடனடியாக சாலையோரம் நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. டிரைவரின் செயல் பயணிகளை நெகிழ வைத்தது. இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையேயும், அரசு போக்குவரத்து ஊழியர்கள் இடையேயும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.