பிளாஸ்டிக் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்: குறைதீர்வு கூட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர் மனு
வேலூர், ஆக.18: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர் மனு அளித்தனர்.வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் லீலா அலெக்ஸ் தலைமையில் நேற்று நடந்தது. டிஆர்ஓ சுரேஷ், தனித்துணை ஆட்சியர் மாறன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ராஜராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூரை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள் அளித்த மனுவில், ‘விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. பிளாஸ்டிக் கலவையால் தயாரிக்கப்பட்ட இந்தச் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கக் கூடாது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என அரசு அறிவித்துள்ளது. எனவே சேண்பாக்கம், ஓல்டுடவுன், கல்புதூர் ஆகிய பகுதிகளில் பிளாஸ்டர் ஆப் பாரிசில் ஆன விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தடை செய்ய வேண்டும். நாங்கள் களிமண்ணால் தயாரிக்கும் விநாயகர் சிலைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறோம்’ என்றனர்.



