ஆயுதபூஜை தொடர் விடுமுறை; தட்கல் ரயில் டிக்கெட் புக்கிங் முறைகேடுகள் தடுக்க தீவிர கண்காணிப்பு: ஆர்பிஎப் போலீசார் நடவடிக்கை
வேலூர், அக்.17: ஆயுதபூஜை தொடர் விடுமுறையால் தட்கல் ரயில் டிக்கெட் புக்கிங் முறைகேட்டை தடுக்க ஆர்பிஎப் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆயுதப்பூஜை 19ம் தேதியும் (திங்கள்), விஜயதசமி 20ம் தேதியும் (செவ்வாய்) கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய நாட்களாக, இன்று சனி, நாளை ஞாயிறு வருகிறது. இதனால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால், பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட நகரப் பகுதியில் வசிக்கும் மக்கள் புறப்பட்டு செல்ல உள்ளனர்.
இதனால் சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் வழியே செல்லும் ரயில்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. கடைசி நேர பயண முயற்சியாக தட்கல் முறையில் டிக்கெட் எடுத்து பயணிக்க பலரும் முயற்சித்து வருகின்றனர். ஒவ்வொரு ரயிலும் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக (முந்தைய நாள்) தட்கல் டிக்கெட் புக்கிங் மேற்கொள்ளப்படுகிறது. இதனை ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மற்றும் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் பயணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தட்கல் டிக்கெட் முன்பதிவில் சில புரோக்கர்கள், முறைகேடாக டிக்கெட் புக்கிங் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. அதனை தடுக்க ரயில்வே பாதுகாப்புப்படை குற்றப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே ஸ்டேஷன் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மற்றும் தனியார் டிக்கெட் புக்கிங் ஏஜென்சிகளில் சோதனையிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கூறியதாவது: ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி தட்கல் டிக்கெட் புக்கிங்கில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது என்பதால் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம். தனியார் ஏஜென்சிகள் மற்றும் சில கணினி மையங்களில் அதிக பணம் பெற்றுக் கொண்டு முறைகேடாக போலி பெயர்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் சந்தேக வளையத்திற்குள் சில மையங்களை கொண்டு வந்துள்ளோம். அங்கு ரகசியமாக கண்காணிக்கும் பணியை தொடங்கி உள்ளோம். தற்போது டிக்கெட் முன்பதிவு மையங்களில் புரோக்கர்களின் நடமாட்டம் இருக்கிறதா? எனவும் சோதனை செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


