காவேரிப்பாக்கம், செப். 17: காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பன்னியூர் கூட்ரோடு பகுதியில் வாலாஜாவில் இருந்து பனப்பாக்கம் மார்க்கமாக செல்லும் நெடுஞ்சாலையும், காவேரிப்பாக்கம் பகுதியில் இருந்து சோளிங்கர் மார்க்கமாக செல்லும் நெடுஞ்சாலையும், இப்பகுதியில் சங்கமிக்கின்றன. இதனால் இப்பகுதி நான்கு வழிதட சந்திப்பாக விளங்கி வருகின்றன. மேலும் இந்த பன்னியூர் கூட்டுரோடு பகுதியைச் சுற்றி உப்பரந்தாங்கல், பொன்னப்பந்தாங்கல், மேல் வீராணம், மகாணிப்பட்டு, ஈச்சங்காடு, உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இதனால் சோளிங்கர், ஆற்காடு, காவேரிப்பாக்கம், உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் பொது மக்கள், இப்பகுதிக்கு வந்து பேருந்து மற்றும் ஆட்டோக்கள் வாயிலாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதன் காரணமாக இப்பகுதியில் மக்கள் கூட்டம் பரப்பரப்பாகவே காணப்படும்.
மேலும் இப்பகுதியில் இரவு மற்றும் பகல் நேரங்களில் நாள்தோறும் சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் இப்பகுதியில் விபத்துக்கள் தடுக்க ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொது மக்கள் அரசுக்கு நீண்ட நாள் கோரிக்க விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதியில் நெடுஞ்சாலையை ஒட்டி அமைக்கப்படும் வணிக வளாக கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் என, பெரும்பான்மையான கட்டிடங்கள் மின்சார ஒயர்களை உரசி கட்டப்பட்டு வருகின்றன. இதனால் மழைக்காலங்களில் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் அசம்பாவிதங்கள் நடைப்பெறாமல் இருக்க மின்வாரிய அதிகாரிகள், நேரில் பார்வையிட்டு கட்டிட உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


