வாணியம்பாடி, செப். 17: வாணியம்பாடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் நடந்தது. இதில் பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி. நேரில் ஆய்வு மேற்கொண்டார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் அம்பூர்பேட்டை பொன்னியம்மன் கோயில் உட்பட மொத்தம் 20 சிலைகள் மற்றும் பொதுமக்கள் 21 சிலைகள் என மொத்தம் 41 சிலைகள் நகரின் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன. விழாவின் 3ம் நாளான நேற்று விநாயகர் சிலைகளை ஏரியில் கரைப்பதற்காக அம்பூர்பேட்டை பஜார் பகுதியில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோயில் அருகே இந்து முன்னணியினால் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட 20 சிலைகள் வாகனங்களில் வரிசையாக அணிவகுத்து நின்றது.
இந்த விஜர்சன ஊர்வலத்தை பிற்பகல் 2 மணிக்கு பாஜக மாநில செயலாளர் வெங்கடேசன் தலைமையில், வாணியம்பாடி நகர திமுக செயலாளர் வி.எஸ். சாரதிகுமார் மற்றும் வாணியம்பாடி முன்னாள் எம்எல்ஏ கோ.செந்தில்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஊர்வலத்தின்போது சிவன், பார்வதி வேடமணிந்த கலைஞர்களின் நடனம் மற்றும் மேளதாளங்கள் முழங்க இந்து அமைப்பினரும், ஏராளமான பக்தர்கள் மற்றும் இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். ஊர்வலமானது ஆசிரியர் நகர், காதர்பேட்டை, சி.என்.ஏ. சாலை, சி.எல். சாலை, பூக்கடை பஜார் மற்றும் கணியம்பாடி வீதி வழியாகச் சென்று, வாணியம்பாடி அடுத்த பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள ஏரியை அடைந்தது. அங்கு அனைத்து விநாயகர் சிலைகளும் கிரேன் உதவியுடன் பாதுகாப்பாக கரைக்கப்பட்டது.
ஊர்வலத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கையாக திருப்பத்தூர் மாவட்ட காவல் எஸ்.பி. அக்ஷய் அனில் வாக்ரே நேரடி மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் 1 ஏடிஎஸ்பி, 4 டிஎஸ்பி, 12 இன்ஸ்பெக்டர்கள், 42 சப் இன்ஸ்பெக்டர்கள், உட்பட ஆயுதப்படை, ஊர்க்காவல் படை போலீசார் என சுமார் 400க்கும் மேற்பட்டோர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


