வேலூர் அரசு மருத்துவமனையின் அவலம்; நெஞ்சு வலிக்கு சென்ற மூதாட்டிக்கு காலில் எக்ஸ்ரே எடுத்த ஊழியர்கள்; அலட்சிய பதிலால் வேதனையில் போலீசில் புகார்
வேலூர், ஆக. 17: வேலூர் அரசு மருத்துவமனையில் நெஞ்சு வலிக்காக சென்ற மூதாட்டிக்கு காலில் எக்ஸ்ரே எடுத்து கொடுத்துள்ளனர். இதுகுறித்து கேட்டால் ஊழியர்கள் அலட்சியமாக பதிலால் வேதனை அடைந்தவர் போலீசில் புகார் செய்துள்ளார். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த பிச்சாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மகேஸ்வரி(65). இவர் நேற்று முன்தினம் வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
எனக்கு கடந்த 12ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், இதயத்தில் பாதிப்பு உள்ளதாக தெரிகிறது. உடனே வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும்படி அறிவுறுத்தினர்.
இதனால் நான் கடந்த 14ம் தேதி வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு மருத்துவர்கள் பரிசோரித்து, எக்ஸ்ரே டெஸ்ட் எடுத்துவரும்படி சீட்டு எழுதி கொடுத்தனர். இதனால் எக்ஸ்ரே எடுக்கும் அறைக்கு சென்றேன். அங்கு இதயத்திற்கு பதிலாக, எனது கால் முட்டியை எக்ஸ்ரே எடுத்தார்கள். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நான், நெஞ்சுவலிக்காக சிகிச்சைக்கு வந்தால், கால் முட்டியை எக்ஸ்ரே செய்கிறீர்களே எனக்கேட்டேன்.
அதற்கு எக்ஸ்ரே எடுத்தவர்கள், ‘தவறுதலாக எடுத்து விட்டோம், நாளைக்கு வாருங்கள்’ என கூறினர். இதனால் மறுநாள் (நேற்றுமுன்தினம்) மீண்டும் மருத்துவமனைக்கு சென்றேன். எக்ஸ்ரே எடுத்துவிட்டு பின்னர் மருத்துவரை பார்த்தேன். சிகிச்சைக்காக சென்ற என்னை 4 மணி நேரம் அலைக்கழித்து மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.




