பேடிஎம்மில் கடன் வாங்கி தருவதாக கூறி பல மாவட்டங்களில் வியாபாரிகளிடம் பல லட்சம் மோசடி செய்து ஆன்லைன் கேமில் பணம் இழந்த வாலிபர்கள்: 4 பேரை 15 கி.மீ. காரில் விரட்டி பிடித்த போலீஸ்
* ஆரணியில் சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்
வேலூர், அக்.16: பல மாவட்டங்களில் கடன் வாங்கி தருவதாக கூறி வியாபாரிகளிடம் பல லட்சம் மோசடி செய்த 4 வாலிபர்களை ஆரணியில் சினிமா பாணியில் சைபர் கிரைம் போலீசார் துரத்தி சென்று கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் காட்பாடி மெட்டுக்குளம் பகுதியை சேர்ந்த 35 வயது பெண், தனது கணவருடன் சேர்ந்து, அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றார். அவர்களிடம் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் இருந்து வருவதாக கூறி 4 பேர் கொண்ட கும்பல் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டனர். அப்போது பேடிஎம் சவுண்டு பாக்ஸ் தருவதாகவும், கடன் தேவைப்பட்டால் கடன் தருவதாகவும் கூறியுள்ளனர்.
நாங்கள் ஏராளமான பேருக்கு கடன் வழங்கி உள்ளோம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய அந்த பெண் தனது மளிகை கடையை விரிவாக்கம் செய்ய ரூ.5 லட்சம் கடன் தேவைப்படுவதாக அவர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து அந்த நபர்கள் பெண்ணின் செல்போனை எடுத்து கடன் ஆப்பை டவுன்லோடு செய்துள்ளனர். பின்னர் பான்கார்டு, ஆதார் கார்டு பெற்றுக்கொண்டு, வங்கி கணக்கில் ரூ.11 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அந்தப் பெண் எனக்கு ரூ.5 லட்சம் தான் தேவை, ஏன் ரூ.11லட்சம் கடன் ஏற்பாடு செய்தீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு மீதி ரூ.6 லட்சத்தை நாங்கள் வங்கிக்கு திருப்பி அனுப்பிவிடுகிறோம் என்று கூறியுள்ளனர்.
பின்னர் சர்வர் பிரச்னையால் திருப்பி அனுப்ப முடியவில்லை. உங்கள் கணவரின் செல்போன் தாருங்கள். அந்த பணத்தை உங்கள் கணவரின் செல்போன் எண்ணுக்கு அனுப்பி விடுகிறோம் என கூறி, அவரது போன் மூலம் ஆன்லைன் கடன் ஆப்கள் டவுன்லோட் செய்து ரூ.24 லட்சம் வரை கடன் பெற்று கொண்டு, அந்த பணத்தை தங்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றி கொண்டுள்ளனர். இந்நிலையில் செல்போன் கொண்டு சென்று 4 நாட்கள் ஆகியும் கொண்டு வரவில்லையாம். இதனால் சந்தேகமடைந்த பெண்ணும், கணவரும் வங்கிக்கு சென்று விவரம் கேட்டபோது, 4 பேர் கொண்ட கும்பல் ரூ.24 லட்சம் கடன் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த பெண் வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரஜினிகுமார் தலைமையிலான போலீசார் மோசடியில் ஈடுபட்ட நபர்களை செல்போன் எண்களை வைத்து தேடி வந்தனர். இந்த 4 பேரும் நேற்று முன்தினம் ஆரணி மளிகை கடையில் கடன் பெற்றுத் தருவதாக மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து வேலூர் சைபர் கிரைம் போலீசாருக்கு, இன்ஸ்பெக்டர் ரஜினிகுமார் தலைமையில் எஸ்ஐ சதீஷ்குமார் மற்றும் போலீசார் ஆரணிக்கு சென்றனர். அப்போது 4 பேரும் போலீசாரை பார்த்ததும் கார் எடுத்துக்கொண்டு தப்பி சென்றனர். போலீசார் சினிமா பாணியில் 15 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று வேலூர் அடுத்த நெல்வாய் பகுதியில் மடக்கி பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், காரில் இருந்தவர்கள் சென்னை குரோம்பேட்டை சேர்ந்த சிவபெருமாள்(40), சேலத்தை சேர்ந்த ராஜவேல்(21), மனோஜ்(21), கிருஷ்ணா(21) என்பதும் கோவை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கடன் வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். மோசடியில் கைதான 4 பேர் வேலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் குறிப்பாக ஆரணி, கண்ணமங்கலம், வேலூர், காட்பாடி போன்ற இடங்களில் பலரிடம் பல லட்சம் பணம் மோசடி செய்துள்ளனர். மோசடி செய்த பணத்தில் உல்லாச வாழக்கை வாழ்ந்துள்ளனர்.
மேலும் ஆன்லைன் கேம் விளையாடி பணத்தை இழந்துள்ளனர். இவர்களிடம் யாராவது கடன் வாங்கி தருவதாக கூறி பணத்தை இழந்து இருந்தால் வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கலாம். சிறு, பெரு வியாபாரிகள் யாரும் இதுபோன்ற கடன் உதவி செய்வதாக கூறினால் அவர்களிடம் ஏமாற வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.


