Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

குடியாத்தத்தில் பேசுவதை தவிர்த்ததால் பயங்கரம்; வழக்கறிஞரை சரமாரி அடித்துக்கொன்ற கள்ளக்காதலி உட்பட 2 பேர் கைது: 5 ஆண்டு காதல் கொலையில் முடிந்தது

குடியாத்தம், அக்.16: 5 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பில் இருந்துவிட்டு திடீரென பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த காதலி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வழக்கறிஞர் காதலனை சரமாரி அடித்து கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக 2 கள்ளக்காதலி உட்பட 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.வேலூர் மாவட்டம், குடியாத்தம் கொண்டசமுத்திரம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கதிரவன்(40). இன்னும் திருமணமாகவில்லை. வழக்கறிஞருக்கு படித்துள்ள இவர் காட்பாடியில் உள்ள தனியார் டிராக்டர் ஷோரூமில் வேலை செய்து வந்தார். குடியாத்தம் அருணாச்சல நகரை சேர்ந்தவர் நட்சத்திரா(36). இவருக்கு திருமணமாகி, கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கதிரவனுக்கும், நட்சத்திராவுக்கும் நட்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

இந்நிலையில் கதிரவன் கடந்த சில மாதங்களாக நட்சத்திராவிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த நட்சத்திரா பலமுறை முயற்சி செய்தும் கதிரவன் பேச மறுத்து விட்டாராம். இதுகுறித்து நட்சத்திரா, தனது அக்கா அமுதா(55) என்பவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து நட்சத்திரா, அமுதா, அவரது மகள் பிரபாவதி(34) மற்றும் சென்னையை சேர்ந்த லட்சுமி(32) ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கதிரவனின் வீட்டிற்கு சென்றார்களாம்.அங்கிருந்த கதிரவனிடம் ‘ஏன் நட்சத்திராவுடன் பழகுவதை நிறுத்தி விட்டாய்? அவர் பலமுறை பேச முயன்றும் ஏன் பேச மறுக்கிறாய்’ எனக்கேட்டு தகராறு செய்துள்ளனர்.

இதில் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த நட்சத்திரா உள்பட 4 பெண்களும் சேர்ந்து கதிரவனை சரமாரி தாக்கியதாக தெரிகிறது. இதில் கதிரவன் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த 4 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதையறிந்த அக்கம்பக்கத்தினர், கதிரவனை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜி, தரணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் கதிரவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர். மேலும் தகவலறிந்த எஸ்பி சிவராமனும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நட்சத்திரா, பிரபாவதி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அமுதா, லட்சுமி ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பேசுவதை தவிர்த்ததால் காதலனை, அவரது கள்ளக்காதலி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.