Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

உல்லாசமாக இருந்து திருமணத்துக்கு மறுப்பு: நிறைமாத கர்ப்பிணி புகாரால் ஆட்டோ டிரைவர் மீது வழக்கு

வேலூர், ஜூலை 16: உல்லாசமாக இருந்துவிட்டு திருமணத்துக்கு மறுப்பதாக நிறைமாத கர்ப்பிணி புகாரால் ஆட்டோ டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் சக்திமணி(25), ஆட்டோ டிரைவர். இவருக்கும் அரியூரை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இப்பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இரண்டு பேரும் அடிக்கடி பல்வேறு இடங்களில் தனிமையில் சந்தித்துக்கொண்டனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சக்திமணி இளம்பெண்ணிடம் பலமுறை உல்லாசமாக இருந்தாராம். இதனால் இளம்பெண் கர்ப்பமானார்.

தற்போது 9 மாத கர்ப்பமாக உள்ள இளம்பெண், சக்திமணியை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு சக்திமணி, ‘உனது கர்ப்பத்துக்கு நான் காரணம் இல்லை. ஆகவே உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது’ என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் வேதனையடைந்த இளம்பெண், தன்னை திருமண ஆசை காட்டி உல்லாசமாக இருந்து கர்ப்பமாக்கிவிட்டு சக்திமணி திருமணம் செய்ய மறுப்பதாக வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கலப்பிரியா, சக்திமணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.