Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஒடுகத்தூர் அருகே நாட்டு துப்பாக்கியுடன் வனப்பகுதியில் பறவைகளை வேட்டையாடிய வாலிபர் அதிரடி கைது: வெடிமருந்து, கத்தி, துப்பாக்கி பறிமுதல்

ஒடுகத்தூர், அக்.15: ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் பறவைகளை வேட்டையாடிய வாலிபரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து வெடிமருந்து, பறவைகள், கத்தி மற்றும் நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் வனச்சரகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் காடுகளும், மலைகளும் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த வனப்பகுதியில் மான், காட்டெருமை, காட்டு பன்றிகள், மயில், காட்டு முயல், பாம்புகள், அரியவகை பறவைகள் போன்ற ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றது. இதனால் காடுகளும், மலைகளும் அதில் வாழும் வனவிலங்குகளையும் வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.

இருந்த போதிலும் ஒரு சில நேரங்களில் மர்ம நபர்கள் வனவிலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடி வருகின்றனர். இதனால் வனத்துறையினரும் அவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஒடுகத்தூர் வனச்சரக அலுவலர் பாபு மற்றும் வனத்துறையினர் நேற்று முன்தினம் மாலை மேலரசம்பட்டு காப்புக்காடு, பெரிய கொட்டான்செட்டி வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்தனர். அவரிடம் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி இருந்தது.

விசாரணையில், பிடிபட்ட நபர் தேந்தூர் மலை கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் சரவணன்(33) என்பதும், இவர் சட்டவிரோதமாக வனப்பகுதிக்குள் நுழைந்து நாட்டு துப்பாக்கி வைத்து பறவைகளை வேட்டையாடியது தெரிய வந்தது. இதுகுறித்து வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து சரவணனை நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து உரிமம் இல்லாத ஒரு நாட்டு துப்பாக்கி, வெடி மருந்துகள், கத்தி, வேட்டையாடிய பறவைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சரவணனை வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.