Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

ஏ,பி,சி என 3 வகையாக மாவட்டங்கள் பிரிப்பு; நடப்பாண்டு புத்தக கண்காட்சி: நடத்த ரூ.8.45 கோடி நிதி ஒதுக்கீடு

வேலூர், அக்.15: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடப்பாண்டு புத்தக கண்காட்சி நடத்த ரூ.8.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பொதுநூலகத்துறை சார்பில், பொதுமக்களிடையே வாசிப்பு பழக்கத்தை வலுப்படுத்தவும், நூல்களுக்கான அணுகலை மேம்படுத்தவும் 2022-23ம் ஆண்டு முதல் மாநிலம் முழுவதும் மாவட்ட புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வாசகர்கள் தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சிகள் நடத்துவதற்கு ஏதுவாக, வருவாய் மாவட்டங்களை 3 வகையாக பிரித்து, அதில் ஏ-வகை மாவட்டங்களுக்கு ஒரு மாவட்டத்திற்கு ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் வீதம் 7 மாவட்டங்களுக்கு ரூ.1 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம், பி-வகை மாவட்டங்களுக்கு ரூ.14 லட்சம் வீதம் 7 மாவட்டங்களுக்கு ரூ.98 லட்சம், சி-வகை மாவட்டங்களுக்கு ரூ.12 லட்சம் வீதம் 23 மாவட்டங்களுக்கு ரூ.2 கோடியே 76 லட்சம் என மொத்தம் ரூ.4 கோடியே 96 லட்சத்து 50 ஆயிரத்திற்கு நிதி மற்றும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் 2023-24ம் ஆண்டு, 2024-25ம் ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், 2026-27ம் ஆண்டில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சிகள் நடத்த அதற்கான செலவினத்தை முன் பணமாக பெற்று சம்மந்தப்பட்ட மாவட்ட கருவூலத்தில் இருந்து வழங்க வேண்டும். ஒவ்வொரு நிதியாண்டிற்கும் புத்தக கண்காட்சிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என அரசிற்கு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, தற்போது ஆண்டு தோறும் புத்தக கண்காட்சிகள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 2026-27ம் ஆண்டிற்கான செலவினத் தொகையாக ரூ.8.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.