Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திமுக ஆட்சியில் வழங்கியதை கொண்டுவர வைத்து அலைக்கழிப்பு; 3 சக்கர வாகனங்களுக்கு தவெக அரசின் ஸ்டிக்கர் ஒட்டி மீண்டும் வழங்கிய அமைச்சர்: இதுதான் மாற்றமா? என மாற்றுத்திறனாளிகள் கேள்வி

வேலூர், ஜூன் 15: வேலூரில் கடந்த திமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட 4 சக்கர வாகனங்களை கொண்டுவர வைத்து, தவெக அரசின் ஸ்டிக்கர் ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் மீண்டும் வழங்கினார். இதனால் அதிருப்தியடைந்த மாற்றுத்திறனாளிகள் உங்கள் ஆட்சியில் ஏற்பட்ட மாற்றம் இதுதானா? என கேள்வி எழுப்பி உள்ளனர். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் லீலா அலக்ஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளர்களுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனங்களை வழங்கினார்.

இந்த வாகனங்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்னரே திமுக ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட நலத்திட்ட உதவிகளை அதிகாரிகள் வழங்கியதாக தெரிகிறது. அதனை மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், வேலூர் மாவட்டத்திற்கு அமைச்சர் வருகிறார் என்பதற்காக, ஏற்கனவே ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்ட மூன்று சக்கர வாகனங்களை பெற்ற பயனாளிகளை, மீண்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து புதிய பயனாளிகளுக்கு வழங்கியதை போல், தவெக அரசின் ஸ்டிக்கரை ஒட்டி வழங்கினர். அதனை பெற்ற மாற்றுத்திறனாளிகள் 4 மாதங்களுக்கு முன்னரே வாகனம் வழங்கி விட்டதாகவும் தற்போது அழைத்து அலைகழிப்பதாகவும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

மேலும் மாற்றம் ஏற்படும் என நினைத்து வாக்களித்த மக்களும், மாற்றுத்திறனாளிகளும் இதுபோன்ற ஏமாற்றங்களை சந்திக்க வேண்டி உள்ளது. தவெக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் இதுதானா? என கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கிடையில், திமுக ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளர்களுக்கான 3 சக்கர வாகனங்களை மீண்டும் தவெக அரசின் ஸ்டிக்கர் ஓட்டி வழங்கியது தொடர்பாக அமைச்சர் விஜய் பாலாஜியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் ‘இப்போது நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள், அது குறித்து விசாரிக்கிறேன். அப்படி ஏதாவது இருந்தால் நடவடிக்கை எடுக்க சொல்கிறேன்’ என்றார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.