அணைக்கட்டு, அக். 14: அணைக்கட்டு அருகே மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய தனியார் நிறுவன ஊழியரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது மைனர் பெண். 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவரது தாய் அவரை நேற்று முன்தினம் அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அந்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பெண்ணிடம் நடத்திய விசாரணையில், திருப்பத்தூர் மாவட்டம் காந்தி பேட்டை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த அவரது உறவினரான ஆனந்தகுமார்(25) என்பவரிடம் பழகி வந்ததாகவும், அதனால் கர்ப்பம் அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து இதுகுறித்து அணைக்கட்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரிடம் உல்லாசமாக இருந்ததில் அந்த பெண் கர்ப்பம் ஆனதும் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து மைனர் பெண்ணை கர்ப்பம் ஆக்கிய தனியார் நிறுவன ஊழியரான ஆனந்தகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணை மீட்டு, காப்பகத்தில் தங்க வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


