Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொது வழிப்பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததால் கிராம மக்கள் தர்ணா

ராணிப்பேட்டை, ஜூன் 11: ராணிப்பேட்டை எஸ்.பி அலுவலகம் முன், 40 ஆண்டுகளாக பயன்படுத்திய பொது வழிப்பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததால், நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆற்காடு அடுத்த மேலகுப்பம் பகுதியில் வசிக்கும் கிராம பொதுமக்கள் கடந்த 40 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள பொது வழி பாதையாக பயன்படுத்தி வந்தனர். தற்போது அரசு நத்தம் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, தடுப்புச்சுவர் அமைத்து பொதுமக்களை பயன்படுத்த விடாமல் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், அரசு நத்தம் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனி நபரின் மீது நடவடிக்கை எடுத்து 40 ஆண்டுகளாக கிராம மக்கள் பாதையாக பயன்படுத்தி வந்த இடத்தை மீட்டு தர வேண்டும் என்று பலமுறை துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினரிடம் புகார் மனு அளித்தும், இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதைத்தொடர்ந்து நேற்று கிராம பொதுமக்கள், மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தனர். அப்போது பொதுமக்கள் திடீரென எஸ்.பி அலுவலக நுழைவு வாயில் முன் அமர்ந்து, பொதுமக்களின் 40 ஆண்டு காலமாக பயன்பாட்டில் இருந்த பொது வழி பாதையை, ஆக்கிரமிப்பு செய்து கிராம மக்களை மிரட்டி வரும் தனி நபர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு கிராம மக்களின் பொது பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்று கூறி கோஷங்கள் எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், விரைந்து வந்து தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்களிடம், சமரச பேச்சுவார்த்தை நடத்தி, எஸ்.பியிடம் அழைத்து சென்றனர். இதையடுத்து எஸ்பி அலுவலகத்தில் கிராம பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையேற்று கிராம மக்கள் அங்கிருந்து சென்றனர். எஸ்.பி அலுவலகம் முன் ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு தரக்கோரி கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.