Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

தமிழகத்தில் இன்று நடக்கவிருந்த பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு ஒத்திவைப்பு: 24ம் தேதி நடக்கிறது

வேலூர், அக்.10: தமிழகத்தில் இன்று நடக்கவிருந்த பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக அனைத்து வகை அரசுப்பள்ளி மேலாண்மைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள், தலைமையாசிரியர், ஆசிரியர் பிரதிநிதி, கல்வியாளர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் இக்குழுக்களில் உறுப்பினர்களாக இடம்பெறுகின்றனர். இந்த பள்ளி மேலாண்மைக்குழுக்களை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்.

அதன்படி, 2024ம் ஆண்டு பொறுப்பேற்ற மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த மாதத்துடன் நிறைவடைந்ததையடுத்து, 2026-2028ம் ஆண்டுகளுக்கான புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த 12ம் தேதி 50 சதவீத தொடக்கப்பள்ளிகளிலும், 19ம் தேதியன்று மீதமுள்ள 50 சதவீத தொடக்கப்பள்ளிகளிலும், 26ம் தேதியன்று நடுநிலைப்பள்ளிகளிலும் மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 10ம் தேதி(இன்று) உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மறுகட்டமைப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே இந்நிகழ்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டு வரும் 24ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி அரசு பள்ளிகளில் 2026-2028ம் ஆண்டிற்கான காலத்திற்கு, பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. திட்டமிட்டபடி அரசு தொடக்க நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பானது நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு நாளை 10ம் தேதியன்று நடத்துவதற்கு ஏற்கனவே அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது நிர்வாக காரணங்களால் நாளை நடைபெறவிருந்த உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு தற்போது 24ம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என மாற்றியமைக்கப்படுகிறது. எனவே அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள், திருத்திய அட்டவணையின்படி 24ம் தேதியன்று உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பை வெளிப்படையான,

ஜனநாயக மற்றும் உள்ளடக்கிய முறையில், அரசாணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். இத்தேதி மாற்றத்தால் மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பிற்கான உறுப்பினர் தகுதி, உறுப்பினர்களின் எண்ணிக்கை, பிரதிநிதித்துவம், தேர்தல் நடைமுறை மற்றும் பிற வழிகாட்டு நெறிமுறைகளில் எவ்வித மாற்றமும் இல்லை. ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள இதர அனைத்து அறிவுறுத்தல்களும் நடைமுறையில் தொடர்ந்து இருக்கும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்.