காலை, மதிய உணவு திட்டத்தை கண்காணிக்க ஒருங்கிணைப்பு ஆசிரியரை நியமிக்க வேண்டும்: பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு
வேலூர், அக்.10: அரசு பள்ளிகளில் காலை, மதிய உணவு திட்டத்தை கண்காணிக்க ஒருங்கிணைப்பு ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக் கல்வி இயக்குநர், அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் 1ம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் சார்ந்து, அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரமான முறையில் உணவு சமைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்குவதை கண்காணிக்க ஒரு ஒருங்கிணைப்பு ஆசிரியர் நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு நியமிக்கப்படும் ஆசிரியர்கள், சமையலறை தூய்மையாகவும், சமையல் பாத்திரங்கள் சுத்தமாகவும், பாதுகாப்பான குடிநீர் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் முறையாக பராமரிக்கப்படுவதையும் கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் பாதுகாப்பான, சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழலில் வழங்கப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் தலைமை ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய அலுவலரால் உடனுக்குடன் சரி செய்யப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும்.
மேலும் காலை உணவுத் திட்டம் தொடர்பாக சத்துணவு பணியாளர்களால் பராமரிக்கப்படும் கண்காணிப்பு பதிவேடு, சரிபார்ப்பு பட்டியலை கண்காணிக்கவும், குறைபாடுகளை உரிய நேரத்தில் தீர்ப்பதற்காக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பணிகளை தொடர்ந்து கண்காணித்திடவும். அதனை உறுதிப்படுத்தவும், ஒருங்கிணைப்பு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


