வேலூர், செப்.10: காட்பாடி வழியாக சென்ற ரயில்களில் இரண்டு பேரிடம் மொத்தம் 20 சவரன் தங்க நகைகளை திருடிய 2 பேரில் ஒருவரை ஜார்கண்ட் மாநிலம் சென்று ரயில்வே ேபாலீசார் கைது செய்தனர். காட்பாடி வழியாக சென்ற ரயில்களில் இருவேறு நாட்களில் பயணிகளிடம் மொத்தம் 20 சவரன் தங்க நகைகள் களவு போனது. கர்நாடகம், கேரள மாநிலங்களை சேர்ந்த பயணிகளிடம் பெற்ற புகாரின் பேரில் இதுதொடர்பாக காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிப்பதற்காக ரயில்வே எஸ்பி ராஜன் உத்தரவின்பேரில், சேலம் டிஎஸ்பி பெரியசாமி மேற்பார்வையில் காட்பாடி ரயில்வே இன்ஸ்பெக்டர் பொறுப்பு சிவசெந்தில்குமார் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
மேலும், காட்பாடி உட்பட பல்வேறு ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் பெற்ற பதிவுகளை ஆய்வு செய்ததில் குற்றவாளிகள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டம் தானா சுக்தேவ் நகர், டேம்சைட் சரோவர் நகரில் வீட்டில் பதுங்கியிருந்த வழக்குகளில் தொடர்புடைய 2வது குற்றவாளியான சுமன்குமார் வத்சவா(67) என்பவரை கைது செய்தனர். மேலும் திருட்டு நகைகளை விற்று வைத்திருந்த முதல் வழக்கில் திருட்டு போன நகைகளின் மதிப்பான ரூ.3 லட்சம், 2வது வழக்கில் தொடர்புடைய நகைகளின் மதிப்பான ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.8 லட்சத்தை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட சுமன்குமார் வத்சவாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வழக்கில் தொடர்புடைய முதல் குற்றவாளியை தொடர்ந்து தேடி வருகின்றனர்.


