Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கம்யூனிஸ்ட் தலைவரின் கருத்துக்கு பதிலளிக்காமல் நழுவிய அமைச்சர் ‘நன்றி, நன்றி, என் துறையை பற்றி கேளுங்கள்’

வேலூர், செப்.10: கம்யூனிஸ்ட் தலைவரின் கருத்து குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜயபாலாஜி நழுவி சென்றார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழா வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. விளையாட்டு போட்டிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி துவக்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

விளையாட்டுத்துறை சார்ந்த ஒருவரை தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராக முதல்வர் தேர்ந்தெடுத்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டு வீரர்கள் பதக்கம் வெல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு செய்து வருகிறது. பொங்கல் திருநாளுக்கு வழங்குவதற்காக இப்போதைக்கு ஒரு கோடியே 77 லட்சம் வேட்டி சேலைகளை தயாரிக்க வருவாய்த் துறையிலிருந்து தெரிவித்துள்ளார்கள்.

சேலைகளை பொறுத்தவரை எங்கள் அக்கா, தங்கைகளுக்கு பிடித்த மாதிரி வெள்ளி ஜரிகை வைத்தது போன்று தயாரித்து உள்ளோம். கண்டிப்பாக மக்கள் விரும்புவது போல் அவை இருக்கும். வேலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு வரும் வழியில் ரயில்வே கேட் உள்ளதால் இங்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவர்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக கலெக்டர் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக மத்திய அரசிடம் பேசி உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நிருபர்கள், சர்க்காரியா கமிஷன் தொடர்பாக அமைச்சர்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என கம்யூனிஸ்ட் தலைவர் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, நன்றி, நன்றி, என் துறையை பற்றி கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன் என அமைச்சர் விஜய பாலாஜி பதிலளிக்காமல் நழுவிச் சென்றார்.