ஒடுகத்தூர், ஆக.10: ஒடுகத்தூரில் விவசாயிகளின் நன்மைக்காக மழை வேண்டி கழுதைகளுக்கு நேற்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் போதிய மழை இல்லாத காலங்களில் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் நல்ல மழை பொழியும் என்று நமது முன்னோர்களால் நம்பப்பட்டு அந்த சம்பிரதாயம் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தமிழ்நாட்டில் கடும் வறட்சியும், தண்ணீர் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. இதனால் பயிர்கள் முற்றிலும் காய்ந்து போய்விட்டது.
எனவே விவசாயிகளின் நன்மைக்காகவும், மழை வேண்டியும், தண்ணீர் பற்றாக்குறை போக்கவும் வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் நேற்று கழுதைகளுக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கப்பட்டது. இதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமண அழைப்பிதழ் அச்சிட்டு சுற்றியுள்ள கிராமங்களில் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.



