ஆந்திராவில் இருந்து வேலூர் வரும் வாகனங்களுக்கு கிருமி நாசனி தெளிப்பு; பறவைக்காய்ச்சல் தடுக்க எல்லைகளில் தீவிர சோதனை: முட்ைட, கோழிகள் ஏற்றி வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பி வைப்பு
வேலூர், அக்.9: வேலூர் மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் தடுக்கும் வகையில் ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களுக்கு சோதனைச்சாவடிகளில் கால்நடைத்துறையினர் குழு அமைத்து 24 மணி நேரம் கண்காணித்து வருகின்றனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், பறவைக் காய்ச்சலால் ஆயிரக்கணக்கான கோழிகள் பலியாகி வருகின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக கால்நடை துறையினர், ஆந்திரா- தமிழக எல்லையோர மாவட்டங்கள் மூலம் பறவை காய்ச்சல் தமிழகத்திற்கு பரவுவதை தடுக்கும் வகையில் சோதனைச்சாவடிகளில் சிறப்பு முகாம் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
அதாவது, எல்லையோர சோதனைச்சாவடிகளில், கால்நடை துறை உதவி மருத்துவர், ஒரு ஆய்வாளர், ஒரு உதவியாளர் வீதம், 24 மணி நேரமும் ஆந்திரா பகுதியில் இருந்து வரும் வாகனங்களை கண்காணித்து, கிருமி நாசினி தெளித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, பரதராமி, பத்தரப்பல்லி, பொன்னை, சேர்க்காடு உள்பட மாவட்டத்திலுள்ள 5 சோதனை சாவடிகளில் கால்நடை துறையின் சார்பில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனைச்சாவடிகள் வழியாக வரும் வெளிமாநில வாகனங்கள், பதிவேட்டில் குறித்து வைக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி தீவிர சோதனைக்கு பின்பு வாகனங்களின் சக்கரங்களில் கிருமி நாசினி தெளித்து மாவட்ட எல்லைக்குள் அனுமதிக்கின்றனர்.
மேலும் ஆந்திராவில் இருந்து வரும் இறைச்சி கோழிகளை ஏற்றி வரும் வாகனங்கள், முட்டை, தீவனம் போன்ற வானங்களை எல்லையில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும் வேலூர் மாவட்டத்திலிருந்து செல்லும் சரக்கு வாகனங்களுக்கும் கிருமி நாசனி தெளித்து அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஆந்திராவில் பறவைக்காய்ச்சல் பரவுவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து தமிழக- ஆந்திரா எல்லை மாவட்டங்களில் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள எல்லையோரம் 5 சோதனைச்சாவடிகளில் சிறப்பு முகாம் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம் அலுவலகத்தில் 8 மணி நேரம் வீதம் மூன்று ஷிப்ட்களாக பிரித்து ஒவ்வொரு ஷிப்ட்டுக்கும் கால்நடை உதவி மருத்துவர், ஆய்வாளர், உதவியாளர் என்று மூன்று பேர் சுழற்சி முறையில் பணியில் இருப்பர்.
ஆந்திரா மாநிலத்தில் இருந்து வரும் சரக்கு ஆட்டோ, வேன், லாரி போன்ற வாகனங்களில், முட்டை, இறைச்சி கோழி மற்றும் கோழி தீவனங்கள் கொண்டு வரப்படுகிறதா? என கண்காணிக்கப்படுகிறது. மேலும் அந்த வாகனங்களை திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கிருந்து செல்லும் வாகனங்களின் சக்கரங்களுக்கு கிருமி நாசினி தெளித்து அனுப்பி வைக்கப்படுகிறது. இவை அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடைத்துறை மேற்கொண்டு உள்ளது. இதுவரை வேலூர் மாவட்டத்தில் எந்த இடத்திலும் பறவைக்காய்ச்சல் பாதிப்பு இல்லை. எனவே பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினார்.


