காட்பாடி அருகே ஓய்வு பெற்ற அரசு ஆசிரியர் வீட்டில் 36 சவரன் நகைகளை திருடி கைவரிசை காட்டிய கணவன், மனைவி கைது திருடிய நகைகளை விற்று ஜாலி வாழ்க்கை
வேலூர், செப்.9: காட்பாடி அருகே ஓய்வு பெற்ற அரசு ஆசிரியர் வீட்டில் 36 சவரன் நகைகளை திருடி கைவரிசை காட்டிய கணவன், மனைவியை போலீசார் கைது செய்து 26 சவரன் நகைகள், கார் பறிமுதல் செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையை சேர்ந்தவர் ராஜ்குமார். ஓய்வு பெற்ற டெல் நிறுவன ஊழியர். இவரது மனைவி மரியா(63). ஓய்வுப்பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர். இவர்களுக்கு ஷோபனா என்ற மகள் உள்ளார். அவருக்கு திருமணமாகி லண்டனில் வசித்து வருகிறார். இந்நிலையில், ஆற்காடு வேப்பூரில் உள்ள சர்ச் பாதிரியார் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அறிந்து அவரை பார்க்க கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி காலை சென்று விட்டு மீண்டும் இரவு 11 மணிக்கு வீடு திரும்பினர்.
அப்போது, வீட்டின் முன்பக்க இரும்புக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 7 சவரன் ஆரம், 5 சவரன் நெக்லஸ், 2 சவரன் சிறிய நெக்லஸ், 5 சவரன் டாலர் செயின், 4 சவரன் ஒரு ஜோடி வளையல், 4 சவரன் கம்மல் ஒரு ஜோடி, 5 1/2 சவரன் சின்ன செயின், அரை சவரன் மோதிரம் 2 சவரன் பிரெஸ்லெட் என 36 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து மரியா கொடுத்த புகாரின் பேரில் காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். மேலும், மோப்பநாய் சாரா வரவழைக்கப்பட்டு வேறு ஏதேனும் தடயங்கள் இருக்கிறதா என ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும், காட்பாடி டிஎஸ்பி விஜிகுமார் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பெங்களூரு, சென்னை, சித்தூர், வேலூர் உட்பட பல்வேறு ஊர்களில் திருட்டு ஆசாமிகளை தேடி வந்தனர்.
இதில் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து நடத்திய விசாரணையில் ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் கிறிஸ்டியான்பேட்டையில் இருந்து பிரதான சாலைக்கு வந்து அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் சித்தூர் நோக்கி செல்லும் பஸ்சில் ஏறிச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து சித்தூர் விரைந்து சென்ற போலீசார் அங்கு பஸ் நிலையம் உட்பட பல்வேறு சாலை சந்திப்புகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை சித்தூர் போலீசார் உதவியுடன் பெற்று துப்பு துலக்கியதில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த கணவன், மனைவியை சுற்றி வளைத்து பிடித்தனர்.
காட்பாடி காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களது பெயர் முத்துவேல் கார்த்தி(32) என்பதும், உடனிருந்த பெண் அவரது மனைவி பிரபாவதி(30) என்பதும் தெரியவந்தது. விருதுநகரை சேர்ந்த இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதும், வெளியூர்களுக்கு சென்று வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, இதுபோல் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு, திருட்டு நகைகளையும், பொருட்களையும் விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.
அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு சித்தூர் வந்த இவர்கள் அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி காட்பாடி, சித்தூர் உட்பட பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து மொத்தம் 26 சவரன் தங்க நகைகளும், திருட்டுப் பணத்தில் வாங்கிய ஒரு காரும் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து அவர்களை கைது செய்த காட்பாடி போலீசார் நேற்று மதியம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


