வடக்கு மண்டல 11 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்கும் பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வுக்கூட்டம்: சென்னையில் இன்று நடக்கிறது
வேலூர், அக்.8: தமிழகத்தின் வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 11 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் குடிநீர் விநியோகம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது. இதில் வேலூர், திருவண்ணாமலை உட்பட 11 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியுள்ள நிலையில், கிராமப்புறங்களில் வெள்ளத்தடுப்பு, நீர்வரத்துக்கால்வாய்கள் தூர்வாரும் பணி, ஏரி, குளங்கள், குட்டைகள், கண்மாய்கள் சீரமைப்பு, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு மேற்கொள்ள வேண்டிய பணிகள்,
தொற்றுநோய் தடுப்புப்பணிகள் என மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், சீரான குடிநீர் விநியோகத்திற்கான உறுதியை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், மேற்கொள்ள வேண்டிய பணிகள், ஊரக வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த கலந்தாய்வுக்கூட்டம் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் நடத்தப்படுகிறது. அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கில் இன்று 8ம் தேதி வியாழக்கிழமை தமிழகத்தின் வடக்கு மண்டல அளவிலான முதல் ஆய்வுக்கூட்டம் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடக்கிறது. இக்கூட்டத்தில், காஞ்சிபுரம்,
திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 11 மாவட்டங்களின் கலெக்டர்கள், கூடுதல் கலெக்டர்கள்(வளர்ச்சி), திட்ட இயக்குநர்கள், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர்கள், உதவி இயக்குநர்கள், உதவி செயற் பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அனைத்து விவரங்கள் மற்றும் தகவல்களுடன் அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என்று 11 மாவட்ட கலெக்டர்களையும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக ஆணையர் அமுதவல்லி ேகட்டுக் கொண்டுள்ளார்.


