சிபிஎஸ் இறுதி ஒப்பளிப்பு தொடர்பான கருத்துருக்களை ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்: கருவூலம், கணக்கு துறை இயக்குனர் உத்தரவு
வேலூர், அக்.8:சிபிஎஸ் இறுதி ஒப்பளிப்பு தொடர்பான கருத்துருக்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கருவூலம் மற்றும் கணக்கு துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். கருவூலம் மற்றும் கணக்கு துறை இயக்குனர், அனைத்து மண்டல இணை இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 1.09.2026 முதல் சிபிஎஸ் என்கின்ற இறுதி ஒப்பளிப்பு வழங்குவதற்கான அனைத்து கருத்துருக்களும் சம்பந்தப்பட்ட பணம் பெற்று வழங்கும் அலுவலரால் ஆன்லைன் மூலமாக ஐஎப்எச்ஆர்எம்எஸ்-ல் மட்டுமே இவ்வலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் அறிவுறுத்தல் வழங்கப்பட்ட பின்னரும் சில பணம் பெற்று வழங்கும் அலுவலர்களால் சிபிஎஸ் இறுதி ஒப்பளிப்பு தொடர்பான கருத்துருக்கள் ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்கப்படாமல், ஆப்லைன் முறையில் தபால் மூலமாக, நேரடியாக இவ்வலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இது ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு முரணானதாக உள்ளது. எனவே, 01.09.2026 முதல் சிபிஎஸ் இறுதி ஒப்பளிப்பு தொடர்பான கருத்துருக்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆன்லைன் மூலமாக அனுப்பப்படாத சிபிஎஸ் இறுதி ஒப்பளிப்பு கருத்துருக்கள் எவ்விதத்திலும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
குறிப்பாக, தபால் மூலமாகவோ, நேரடியாகவோ அல்லது வேறு எந்த அலுவல் வழிமுறையிலோ அனுப்பப்படும் கருத்துருக்கள், ஐஎப்எச்ஆர்எம்எஸ்-ல் மட்டுமே சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அனைத்து சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கருவூல அலுவலர்கள், தங்களது கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு இவ்வறிவுறுத்தலை உடனடியாகவும், தெளிவாகவும் தெரிவித்து, இனிவரும் காலங்களில் சிபிஎஸ் இறுதி ஒப்பளிப்பு தொடர்பான கருத்துருக்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வறிவுறுத்தலுக்கு பிறகும் தபால், நேரடி முறையில் கருத்துருக்கள் அனுப்பப்படும் பட்சத்தில், அதனால் ஏற்படும் காலதாமதம் அல்லது கருத்துரு திருப்பி அனுப்பப்படுவதற்கான முழுப் பொறுப்பும் சம்பந்தப்பட்ட பணம் பெற்று வழங்கும் அலுவலரையே சாரும். எனவே சிபிஎஸ் இறுதி ஒப்பளிப்பு கருத்துருக்களை ஆன்லைன் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்கும் நடைமுறையை அனைத்து சம்பந்தப்பட்ட பணம் பெற்று வழங்கும் அலுவலர்களும் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வறிவுறுத்தலைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தி எந்தவொரு தாமதமும் ஏற்படாதவாறு தங்களின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் உரிய முறையில் தக்க அறிவுரை வழங்குமாறு அனைத்து சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர்கள் மற்றும் கருவூல அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் அனைத்து மண்டல இணை இயக்குநர்களும் இது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


