அனைத்து பதிவு பெற்ற தொழிற்சாலைகளும் ஆன்லைனில் உரிமம் புதுப்பிக்க வரும் 31ம் தேதி கடைசி நாள்: தொழிலக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்
வேலூர், அக்.8: வேலூர், திருவண்ணமாலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அனைத்து பதிவு பெற்ற தொழிற்சாலைகளும் தொழிற்சாலை உரிமத்தினை ஆன்லைன் மூலமாக மட்டுமே புதுப்பிக்க வேண்டும். வரும் 31ம் தேதி கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.வேலூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக-I மற்றும் 2-ம் கோட்ட இணை இயக்குநர்கள் ஜவஹர் மற்றும் சாந்தினிபிரபா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் செயல்படும் தொழிற்சாலைகள், தொழிற்சாலைகள் சட்டம் 1948-ன்படி 2027ம் ஆண்டுக்கான உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்.
இதற்காக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுவலகத்திற்கு யாரும் நேரில் வரவேண்டிய அவசியம் இல்லை. https://dish.tn.gov.in என்ற இணையதளம் மூலம் உரிய கட்டணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த உடனே புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிமம் திருத்தம், உரிமம் மாற்றம் ஆகியவற்றுக்கும் இணைய வழியில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது தகுந்த சான்று, ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதேபோல் ஒப்பந்த தொழிலாளர் (முறைப்படுத்துதல் மற்றும் நீக்குதல்) சட்டம் 1970 மற்றும் தமிழ்நாடு ஒப்பந்த தொழிலாளர் விதிகள் 1975 மற்றும் மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயரும் தொழிலாளர்கள் சட்டம் 1979 மற்றும் தமிழ்நாடு விதிகள் 1983 ஆகியவற்றின் கீழ் உரிமத்தை ஒப்பந்ததாரர்கள் இணையதளம் மூலம் உரிய கட்டணம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம். உரிமம் புதுப்பிக்க வருகின்ற 31ம் தேதி கடைசி நாளாகும். அதற்கு பிறகு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பவர்கள் தாமத கட்டணம் செலுத்த வேண்டும். உரிய உரிமம் இன்றி செயல்படும் தொழிற்சாலைகள் மீது நீதிமன்றம் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


