கே.வி.குப்பம் அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டல்; டெய்லருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை: போக்சோ கோர்ட் உத்தரவு
வேலூர், செப்.8: கே.வி.குப்பம் அருகே 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டெய்லருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா சோழமூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (57). இவர் டெய்லராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி இவரது கடைக்கு 9 வயது சிறுமி தைக்க கொடுத்திருந்த புதிய துணிகளை வாங்கி செல்வதற்காக சென்றுள்ளார். அப்போது சிறுமியிடம் டெய்லர் பார்த்திபன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே யாரிடமும் தெரிவிக்க கூடாது என்று கூறி மிரட்டி உள்ளார்.
இருப்பினும் நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் அழுதபடியே சிறுமி கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து பார்த்திபனை கைது செய்தனர். இந்த வழக்கு வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதி மோனிகா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பார்த்திபன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.26 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.


