ஆன்லைனில் வாங்கிய கடனை செலுத்திய பிறகும் மனைவி போட்டோவை ஆபாசமாக சித்தரித்து கணவருக்கு அனுப்பி மிரட்டல்
கே.வி.குப்பம், செப்.8: குடியாத்தம் அருகே வாங்கிய கடனை செலுத்திய பிறகும், ஏஜென்டுகள் பெண்ணின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து கணவருக்கு அனுப்பி மிரட்டி வருகின்றனர். குடியாத்தம் நகரை சேர்ந்தவர் 38 வயது கூலித்தொழிலாளி. இவரது மனைவி கடந்த ஆண்டு அவசர தேவைக்காக ஆன்லைன் லோன் ஆப் மூலம் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கினார். மேலும் சிறுக சிறுக மாதத்தவணையை வட்டியோடு சேர்த்து முழுவதுமாக கட்டி உள்ளார். ஆனால் கடன் கொடுத்த நிறுவனத்தின் ஏஜென்டுகள் அந்த பெண்ணிடம் இன்னும் ரூ.30 ஆயிரம் கடன் பாக்கி உள்ளது. அதை நீங்கள் செலுத்த வேண்டும் எனக் கூறி மிரட்டி உள்ளனர். அதற்கு அவர், நான் வட்டியோடு சேர்த்து மொத்த கடன் தொகையை செலுத்தி விட்டேன், எனக்கு கடன் பாக்கி இல்லை என தெரிவித்துள்ளார். அதனை கண்டுகொள்ளாத ஏஜென்டுகள் பெண்ணுக்கும், அவரின் கணவருக்கும் தொடர்ந்து போன் செய்து பணத்தை செலுத்தும்படி தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் ஏஜென்டுகள் பெண்ணின் படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அவருடைய கணவரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி உள்ளனர். மேலும் தொழிலாளியின் செல்போனில் இருந்த அனைத்து எண்களுக்கும் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படங்களை அனுப்பி வைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதி குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க வந்தனர். அங்கு அந்த பெண்ணுக்கு போலீசார் ஆறுதல் கூறி வேலூரில் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்குமாறு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.


