குடியாத்தம் அருகே வீடு வீடாக சென்று ரேஷன் கடை பாமாயிலை கூடுதல் விலை கொடுத்து வாங்கும் மர்ம நபர்கள்: இணையத்தில் வீடியோ வைரல்
கே.வி.குப்பம், செப்.8: குடியாத்தம் அருகே மர்ம நபர்கள் வீடு வீடாக சென்று ரேஷன் கடையில் வழங்கிய பாமாயில் பாக்கெட்டுகளை கூடுதல் விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்முட்டுக்கூர், தட்டாங்குட்டை, கல்மடுகு, கூடநகரம், மேல்ஆலத்தூர் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் இருசக்கர வாகனத்தில் வலம் வரும் சிலர், வீடு வீடாக சென்று ரேஷன் கடையில் வழங்கப்பட்ட பாமாயில் எண்ணெய் பாக்கெட்டுகளை கூடுதல் விலை கொடுத்து வாங்குவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு வாங்கப்படும் பாமாயில் பாக்கெட்டுகள் கடைகள், ஓட்டல்களுக்கு அதிக விலைக்கு சப்ளை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அதன்படி நேற்று தட்டாங்குட்டை கிராமத்தில் சிலர், பொதுமக்களிடம் அதிக விலை கொடுத்து பாமாயில் பாக்கெட்டுகளை வாங்கி உள்ளனர்.
குறிப்பாக காலை 6 மணி முதல் 8 மணி வரை என நேரம் ஒதுக்கீடு செய்து கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்களிடம் பெறுகின்றனர். இதனை கண்ட அப்பகுதியினர் மர்ம நபர்கள் வைத்திருந்த மூட்டைகளை திறந்து பார்த்துள்ளனர். அதில் 150க்கும் மேற்பட்ட பாமாயில் பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதனை சிலர் தங்களின் செல்போன் மூலம் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்காக ரேஷன் கடைகளில் குறைவான விலைக்கு வழங்கப்பட்ட பாமாயில் பாக்கெட்டுகளை சிலர் கள்ளத்தனமாக வாங்கி செல்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


