ஒடுகத்தூர் அருகே வீட்டில் விளையாடிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட மேஸ்திரி போக்சோவில் கைது
ஒடுகத்தூர், செப்.7: ஒடுகத்தூர் அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேஸ்திரியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 9 வயது சிறுமி. அதேபோல் மதுரையை சேர்ந்தவர் குமார் (36). கட்டிட மேஸ்திரியான இவர் ஒடுகத்தூர் அருகே கடந்த 10 ஆண்டுகளாக மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி நேற்று வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது மது போதையில் அங்கு வந்த மேஸ்திரி, சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.
மேலும் இந்த விஷயத்தை யாரிடமாவது கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில் நடந்த சம்பவத்தை அழுது கொண்டே தனது தாயிடம் சிறுமி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் நேற்று வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த மேஸ்திரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


