வேலூர், ஆக. 7: காட்பாடியில் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வந்த 2 கிலோ கஞ்சாவை போதை பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். காட்பாடி ரயில் நிலையம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சாவை கடத்தி வருவதாக வேலூர் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்ஐ கார்த்திக்செல்வம் தலைமையிலான போலீசார் நேற்றுமுன்தினம் ரயில்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டானாபூரில் இருந்து பெங்களூர் செல்லும் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது முன்பதிவு இல்லாத ஒரு பெட்டியில் இருக்கையின் அடியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இருந்த பையை போலீசார் சோதனை நடத்தினர். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதுகுறித்து அந்த பெட்டியில் பயணம் செய்தவர்களிடம் விசாரித்தபோது அந்த பை யாருடையது என்று தங்களுக்கு தெரியாது என்று தெரிவித்தனர் அதைத்தொடர்ந்து போலீசார் பையில் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



