தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இந்தாண்டு புதிதாக உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் நியமனம் இல்லை: திருத்தப்பட்ட அட்டவணையால் கடும் அதிருப்தியில் இளைஞர்கள்
* நடப்பாண்டிலேயே தேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை
வேலூர், ஆக.7:தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் திருத்தப்பட்ட வருடாந்திர அட்டவணையால் நடப்பாண்டு உதவி ஆய்வாளர், காவலர் உள்ளிட்ட எந்தவொரு தேர்வும் இல்லாததால் இளைஞர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நடப்பாண்டிலேயே தேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2026ம் ஆண்டிற்கான வருடாந்திர தேர்வு அட்டவணை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இதில் சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) பணிக்கு மே மாதமும், இசைக்காவலர் பணிக்கு ஜூலை மாதமும், பொது ஆட்சேர்ப்பு பணிக்கு செப்டம்பர் மாதமும், ஒருங்கிணைந்த ஆட்சேர்ப்பு பணிகளுக்கு நவம்பர் மாதமும் தேர்வு அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டு இருந்தது.
அதன்படி, சார்பு ஆய்வாளர் தொழில்நுட்ப பணிக்கு கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால் இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை தேர்வு அறிவிப்பு வெளியாகவில்லை. சார்பு ஆய்வாளர் தொழில்நுட்ப பணிக்கு விரைவில் தேர்வு அறிவிப்பு வரும் என தேர்வர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம், 2026-27ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில் சார்பு ஆய்வாளர் (தொழில் நுட்பம்) பணிக்கு 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதமும், இசைக்காவலர் பணிக்கு மார்ச் மாதமும், பொது ஆட்சேர்ப்பு பிரிவிற்கு ஜூன் மாதமும், ஒருங்கிணைந்த ஆட்சேர்ப்பு பணிகளுக்கு ஆகஸ்ட் மாதமும் அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டிலேயே தேர்வு அறிவிப்பு வரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அடுத்த ஆண்டில் நடைபெறும் என்ற அறிவிப்பு தேர்வர்கள் மற்றம் இளைஞர்களிடம் பெரிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து பயற்சி பெறும் போட்டித்தேர்வர்கள் கூறியதாவது:தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடப்பாண்டு சார்பு ஆய்வாளர் தொழில்நுட்பம், இசைக்குழு காவலர், பொதுத்தேர்வு மற்றும் ஒருங்கிணைந்த தேர்வு நடத்தப்படும் என 2026ம் ஆண்டிற்கான வருடாந்திர அட்டவணை வெளியிடப்பட்டது. இதில் தொழில்நுட்ப சார்பு ஆய்வாளர், இசைக்குழு காவலர், இரண்டாம் நிலைக்காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், வார்டன், தீயணைப்பாளர், சார்பு ஆய்வாளர் தாலுகா, கைரேகை, ஆயுதப்படை, தமிழ் நாடு சிறப்பு காவல்படை, தீயணைப்பு நிலைய அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆள்சேர்ப்பு நடக்கும் என தேர்வர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து இருந்தோம்.
இந்நிலையில் சீருடை பணி தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞர்கள் மற்றும் பெண்களின் கனவை சிதைக்கும் வகையில், தேர்வாணையம் 2026-27ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வருடாந்திர அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் நடப்பாண்டு நடத்த வேண்டிய 4 தேர்வுகளும் அடுத்தாண்டு பிப்ரவரி, மார்ச், ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் அறிவிப்பு வெளியிட்டு தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் எஸ்ஐ, காவலர் பணிக்காக இரவு பகலாக படித்து வருகிறோம். ஆனால் நடப்பாண்டில் சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் எந்த ஒரு தேர்வும் நடத்தாமல் இருப்பது, எங்களை மனதளவில் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. ஏற்கனவே, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் டிஎஸ்பி, மாவட்ட வேலை வாய்ப்பு உள்ளிட்ட முக்கிய பதவிகள் இல்லாமல் மிகக்குறைந்த அளவில் 26 பணியிடங்களுக்கு மட்டும் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்த வகையில் தற்போது சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடப்பாண்டில் எந்தவொரு தேர்வும் நடத்தப்படாது என்ற அறிவிப்பு பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. அடுத்தாண்டு தேர்வு நடத்தினால் பலருக்கு வயது வரம்பு காரணமாக வேலைவாய்ப்பு தகுதியின்மை இழக்கும் அபாயம் உள்ளது. இந்தாண்டு காவல்துறையில் எந்த ஒரு புதிய நியமனம் கிடையாது. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் காவல்துறை எதிர்பார்ப்பு கேள்வி குறியாக உள்ளது. எனவே நடப்பாண்டில் தேர்வு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



