10ம் வகுப்பு துணைத்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இணையதளத்தில் பதிவிறக்கலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
வேலூர், ஆக.7: கடந்த மாதம் நடந்த 10ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் மற்றும் தற்காலிக விடைத்தாள் பதிவிறக்கம் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற்ற துணைத் தேர்வை 66,488 தேர்வர்கள் எழுதினர். இவர்கள், தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 5ம் தேதி(நேற்று முன்தினம்) மாலை முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோல் விடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை மேற்கண்ட இணையதளத்தின் ‘நோட்டிபிகேஷன்’ பகுதியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 10.08.2026 மற்றும் 11.08.2026 ஆகிய நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இதில் தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை மாவட்டத் தேர்வர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஒரு பாடத்திற்கான விடைத்தாள் ஒளிநகல் கட்டணம் ரூ.275 பணமாகச் செலுத்த வேண்டும். விடைத்தாள் ஒளிநகல் பெற்ற தேர்வர்களுக்கு மட்டுமே பின்னர் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். தேர்வு முடிவுகளை பொறுத்தவரை தேர்வர்கள் அதனை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்கக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.



