Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 45 வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிய நோட்டா அதிகாரிகள் தகவல்

வேலூர், மே 6: வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 45 வேட்பாளர்களை நோட்டா பின்னுக்கு தள்ளியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம்(தனி), குடியாத்தம்(தனி) ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில், திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட 65 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் வேலூர் தொகுதியில் நோட்டாவுக்கு 757 வாக்குகள் பதிவானது. 15 ேவட்பாளர்களில், 11 வேட்பாளர்கள் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றனர்.

அதேபோல், காட்பாடியில் நோட்டாவுக்கு 745 வாக்குகள் பதிவானது. போட்டியிட்ட 15 பேரில், 11 வேட்பாளர்கள் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றனர். அணைக்கட்டு தொகுதியில் 13 வேட்பாளர்களில், 9 வேட்பாளர்கள் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றனர். கே.வி.குப்பம் தொகுதியில் நோட்டாவுக்கு 972 வாக்குகள் பதிவானது. இதில் போட்டியிட்ட 11 வேட்பாளர்களில், 7 வேட்பாளர்கள் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்றனர். குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் 799 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவானது. இதில் போட்டியிட்ட 11 வேட்பாளர்களில், 7 வேட்பாளர்கள் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்றனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில், நோட்டாவுக்கு மொத்தம் 4,376 வாக்குகள் பதிவானது. போட்டியிட்ட 65 வேட்பாளர்களில் 45 வேட்பாளர்கள் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காட்பாடி 1,889, வேலூர் 1,441, அணைக்கட்டு 1,791, கே.வி.குப்பம் 1,798, குடியாத்தம் 1,699 என மொத்தம் 8,618 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவானது.

தற்போது, நடந்த முடிந்த 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நோட்டாவுக்கு 4,376 வாக்குகள் பதிவானது. இது கடந்த 2021ம் தேர்தலுடன் ஒப்பிடுகையில் 4,242 நோட்டா வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் சேர்த்து 2,243 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவானது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் சேர்த்து 3,337 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவானது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் சேர்த்து 6,092 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவானது.

வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 33,609 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவானது. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 16,048 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவானது. 2021ம் தேர்தலுடன், 2026ம் தேர்தலுடன் ஒப்பிடுகையில், 17,516 வாக்குகள் நோட்டாவுக்கு குறைவாக பதிவாகியுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.