வேலூர், நவ.5: தமிழகம் முழுவதும் 7 இடங்களில் இயங்கிய நன்னடத்தை கைதிகளின் பெட்ரோல் பங்க்குகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தீபாவளி பட்டாசு விற்பனையும் கைவிடப்பட்டதால், பல கோடி வருமானம் பறிபோனதாக மக்கள் அதிருப்பதி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், உள்ள சிறைகளில் நன்னடத்தை கைதிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் வேலூர், கோவை, புழல், பாளையங்கோட்டை புதுக்கோட்டை, சேலம், மதுரை ஆகிய 7 மத்திய சிறைகளுக்கு அருகில் பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்பட்டு நன்னடத்தை கைதிகளால் நடத்தப்பட்டு வந்தது. வேலூர் மத்திய சிறை அருகே கடந்த 2019ம் ஆண்டு முதல் நன்னடத்தை கைதிகள் கொண்டு பெட்ரோல் பங்க் இயங்க தொடங்கியது.
அதேபோல் சிறைச்சாலைகளின் அருகே கோழிக்கறி கடைகள், கைதிகளால் தயாரிக்கப்படும் ஷூக்கள், காலணிகள், பேக் போன்றவை விற்பனை செய்யப்படும் சிறிய அங்காடிகள் நடத்தப்பட்டு வந்தது. அவை தரமாக இருந்ததால் பொதுமக்களும் அதிகளவில் விரும்பி வாங்கி சென்றனர். இந்நிலையில், சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து 2 கைதிகளும், கடந்த 26ம் தேதி தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகளும் தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து சிறைகளில் 3 அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நன்னடத்தை கைதிகள் நடத்தி வந்த பெட்ரோல் பங்க், கறிக்கோழி கடை, உணவகம் உள்ளிட்டவை கடந்த 30ம் தேதி முதல் மூடப்பட்டது. வேலூர் மத்திய சிறை அருகே 4 நாட்களாக பெட்ரோல் பங்க் மூடப்பட்டதால் சுமார் ரூ.48 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தேனியில் கைதிகள் தப்பிய சிறையில் டிஜிபி சங்கர் கடந்த 31ம் தேதி ஆய்வு செய்தபோது, ‘மாவட்ட சிறைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். இதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் மீண்டும் முழுமையான பாதுகாப்பு ஆய்வு செய்யப்படும். கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளது. சிறைகளில் சில குறைகள் உள்ளன. அதை ஏற்கனவே கூறி உள்ளோம். இவை அனைத்தும் சீர் செய்யப்படும்’ என தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளிட்ட அறிக்கையில், ‘தவெக ஆட்சியில் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை மூலம் நடைபெற்று வருகின்ற பெட்ரோல் சில்லரை விற்பனை நிலையங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு ஒரு முயற்சி நடப்பதாக தகவல் கசிந்திருக்கிறது. அதன் முதல் கட்டமாக தமிழகத்தில் மத்திய சிறைசாலைகள் மூலமாக நடத்தப்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கிறது. அங்கே இறைச்சி மற்றும் சிறை துறை மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யும் நிலையமும் மூடப்பட்டிருக்கிறது. அவற்றையெல்லாம் தனியாருக்கு தாரைவார்க்கின்ற அந்த மகத்துவமான பணியை தவெக அரசு செய்ய போகிறது’ என குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன், கைதிகள் இல்லாமல், தனி நபர்களை வைத்து, பெட்ரோல் பங்க்குகளை நேற்று மீண்டும் திறந்தது. பெட்ரோல், டீசல் வினியோகம் செய்யும் பணிகள் தொடங்கியது. ஆனால், கைதிகள் நடத்திய உணவகம், கறிக்கோழி கடை ஆகிய தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. இவையும் விரைவில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நன்னடத்தை கைதிகள் நடத்திய பெட்ரோல் பங்க், விற்பனை நிலையங்கள் மூலம் அவர்களுக்கு அதிகளவு வருமானம் கிடைத்தது. தற்போது அந்த வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறை நிர்வாகத்துக்கு கிடைக்க வேண்டிய பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் கைதிகளுக்கான வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதால், கடும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், விடுதலையாகி வெளியே வந்த பிறகு இயல்பாக வாழ முடியாது எனவும் கைதிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில் வேலூர் மத்திய சிறை அருகே தீபாவளி பண்டிகையையொட்டி கைதிகள் மூலம் பட்டாசு விற்பனை செய்ய சிறை நிர்வாகம் முடிவு செய்திருந்தது. இதற்காக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று, சிவகாசியில் இருந்து சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை வாங்கியது. ஆனால், கடைகளை நடத்த கைதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், விற்பனைக்காக வாங்கிய பட்டாசுகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


