பேரணாம்பட்டு, நவ.5: பேரணாம்பட்டு அருகே வனவிலங்குகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பல்லாலகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன்(75). இவரது மகன் சுரேஷ்(45). இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் துலாக்கான் குட்டையில் உள்ளது. தற்போது அதில் வேர்க்கடலை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் வேர்க்கடலையை அருகே வனப்பகுதியில் இருந்து வரும் வனவிலங்குகள் அவ்வபோது சேதப்படுத்தி வந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த ரங்கநாதன் தனது விவசாய நிலத்தை சுற்றி மின் வேலி அமைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று ரங்கநாதன் மின்வேலி அருகே உள்ள பிளாஸ்டிக் குடையை எடுக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கால்தவறி மின் வேலி மீது விழுந்த ரங்கநாதன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகன் சுரேஷ் விரைந்து சென்று, அங்குள்ள தென்னை மட்டைகளை எடுத்து தந்தையை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்த நிலையில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையறிந்த சுரேஷ் மனைவி திரிபா, தனது மாமியார் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். மேலும், மேல்பட்டி காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மேல்பட்டி இன்ஸ்பெக்டர் பச்சை முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் சடலங்களை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாய பயிர்களுக்காக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


