வேலூர், நவ.4: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை ஏற்பட்ட திடீர் தீயால் சுமார் அரை மணிநேரத்திற்கும் மேல் அவ்வளாகம் இருளில் மூழ்கியது. வேலூர் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள மின்கட்டுப்பாட்டு அறையில் உள்ள சர்க்யூட்டுகளில் ஒன்றில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென வெடிச்சத்தம் கேட்டதுடன், அந்த இடம் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக பொதுப்பணித்துறையினர் அங்கிருந்த மின்சாரத்தால் ஏற்படும் தீயை அணைக்கும் சாதனத்தால் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினரும் பொதுப்பணித்துறையினருடன் இணைந்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முழுவதும் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது. தொடர்ந்து பொதுப்பணித்துறை, மின்வாரிய ஊழியர்கள் இணைந்து மின்பாதிப்பை சரி செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


