Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்; அரசு டாக்டர் வீட்டில் 45 சவரன், ரூ.1.6 லட்சம் திருட்டு: மர்ம ஆசாமிகளுக்கு வலை

வேலூர், ஆக. 4: வேலூர் சத்துவாச்சாரியில் அரசு டாக்டர் வீட்டில் 45 சவரன் நகைகள், ரூ.1.60 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் சத்துவாச்சாரி அடுத்த ஏரியூர் பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம். இவரது மனைவி அம்பிகா(70). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒரு மகன் பெங்களூருவில் தங்கி சேல்ஸ்மேனாகவும், மற்றொரு மகனான புருஷோத்தமன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் டாக்டராகவும் வேலை செய்து வருகின்றனர். முனிரத்தினம் இறந்துவிட்டதால், அம்பிகா மட்டும் தனியாக வசித்து வருகிறார். மகன்கள் அவ்வப்போது வீட்டிற்கு வந்து செல்வார்களாம்.

இந்நிலையில் அம்பிகா கடந்த 1ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு செங்கல்பட்டில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை இவரது வீட்டின் மாடியில் வாடகைக்கு வசித்து வரும் பாலாஜி என்பவர் கீழே வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அம்பிகாவிற்கு போன் மூலம் தகவல் கொடுத்தார். அதன்பேரில் அம்பிகா மற்றும் அவரது மகன்கள் நேற்று மாலை வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த 45 சவரன் நகை, ரூ.1.60 லட்சம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அம்பிகா சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஏஎஸ்பி தனுஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்புதுலக்கப்பட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அம்பிகா வீட்டில் டிஜிட்டல் அலாரம் பொருத்தப்பட்டுள்ளது. கதவு திறக்கப்பட்டால் அலாரம் ஒலிக்கும். கதவு திறக்கும்போதெல்லாம் அலராம் அடிப்பதால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அடிக்கடி வெளியே வந்து பார்ப்பார்களாம். இதனால் அம்பிகா அலாரத்தை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருந்தாராம்.

மகன் வீட்டுக்கு செல்லும்போதுகூட ஆன் செய்யாமல் சென்றுள்ளார். இது மர்ம நபர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.