Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பயணிகள் நெரிசலை தவிர்க்க காட்பாடி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே தகவல்

வேலூர், ஜூன் 4: கோடைக்காலப் பயணியர் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, செர்லப்பள்ளி மற்றும் திருவண்ணாமலை இடையே 17 சேவைகளை கொண்ட வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வேயின் திருச்சிராப்பள்ளி கோட்டம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு சமீபகாலமாக கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் வருகின்றனர். இதனால் ஒவ்வொரு மாத பவுர்ணமியன்றும் கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து அம்மாநில சாலை போக்குவரத்துக்கழகங்கள் சிறப்பு பஸ்களை இயக்குவதுடன், சுற்றுலா பேருந்துகளையும் வாடகைக்கு விடுகின்றன. இதுதவிர தெற்கு ரயில்வேயும் சிறப்பு ரயில்களை இயக்குகிறது. ஆனாலும், விடப்படும் சிறப்பு ரயில்களிலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் போகிறது. அதேபோல் நாள்தோறும் வரும் பக்தர்களுக்கும் இயக்கப்படும் பஸ்கள் மற்றும் ரயில்கள் போதுமானதாக இல்லை என்ற வேதனை குரல்கள் எழுந்து வருகின்றன. எனவே, திருவண்ணாமலை-திருப்பதி, திருவண்ணாமலை பெங்களூருவுக்கு வேலூர், காட்பாடி வழியாக கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்த நிலையில், கோடைக்கால விடுமுறை நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ெதற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, வண்டி எண் 07001 செர்லப்பள்ளி-திருவண்ணாமலை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் நாளை 4ம் தேதி முதல் செப்டம்பர் 24ம் தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த நாட்களில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 5.50 மணிக்கு செர்லப்பள்ளியில் இருந்து புறப்பட்டு நலகொண்டா, மிர்யாலகுடா, குண்டூர், தெனாலி, பாபட்லா, சீராலா, ஓங்கோல், நெல்லூர், ரேணிகுண்டா, திருப்பதி, பாகாலா, சித்தூர், காட்பாடி, வேலூர் கன்டோன்மென்ட் வழியாக திருவண்ணாமலைக்கு மறுநாள் மதியம் 1.30 மணிக்கு வந்தடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு நேற்று (ஜூன் 3ம் தேதி) காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 07002 ஆக திருவண்ணாமலை-செர்லப்பள்ளி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் நாளை 5ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 26ம் தேதி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இயக்கப்படுகிறது. இந்த நாட்களில் திருவண்ணாமலையில் இருந்து இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு வேலூர் கன்டோன்மென்ட், காட்பாடி, சித்தூர், பாகாலா, திருப்பதி, ரேணிகுண்டா, நெல்லூர், ஓங்கோல், சீராலா, பாபட்லா, தெனாலி, குண்டூர், மிர்யாலகுடா, நலகொண்டா வழியாக செர்லப்பள்ளிக்கு மறுநாள் சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு சென்றடையும். இதற்கான டிக்கட் முன்பதிவும் நேற்று 3ம் தேதி முதல் தொடங்கியுள்ளது.

இந்த ரயிலில் ஏசி டூ டயர் பெட்டிகள், 5 ஏசி த்ரீ டயர் பெட்டிகள், 10 ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 2 லக்கேஜ் மற்றும் பிரேக் வேன் பெட்டிகள் என மொத்தம் 24 பெட்டிகள் இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.