Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலையில் சாலை வசதி இல்லை; பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி வந்த அவலம்: விரைவாக சாலை வசதி ஏற்படுத்த மலைவாழ் மக்கள் கோரிக்கை

அணைக்கட்டு, ஜூலை 3: அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலையில் சாலை வசதி இல்லாததால், பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி வந்த அவலநிலை தொடர்கிறது. விரைவாக சாைல வசதி ஏற்படுத்த மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அல்லேரி மலை கிராமத்தில் அல்லேரி, ஆட்டுக்காரன்துறை, நெல்லிமரத்துகொல்லை, சுருட்டையன்கொல்லை உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு வசிக்கும் மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது மலை அடிவாரத்திலிருந்து அல்லேரி மலைக்கு செல்வதற்கு தார் சாலை வசதிமட்டுமே.

இதற்கு முன்பு சாலை வசதி இல்லாத காரணத்தினால் உடனடியாக ஆம்புலன்ஸ் மலைக்கு வராத நிலை ஏற்பட்டு பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட குழந்தை உட்பட இருவர் பலியாகினர். தொடர்ந்து அந்த மலைக்கு சாலை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதற்கிடையே மலைப்பகுதிக்கு மினி ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி, மலையில் வசிக்கும் கர்ப்பிணிகள் உட்பட அவசர மருத்துவத்துவ உதவிக்கு அந்த ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிைலயில் சுருட்டையன் கொல்லைமலை கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரது மனைவி தீபா(19) நிறைமாத கர்ப்பிணி. இவருக்கு சில தினங்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டு அவதிப்பட்டார். அங்கிருந்த மலைவாழ் மக்கள் அவருக்கு வீட்டிலே பிரசவம் பார்க்க முயன்றனர்.

இருப்பினும் மருத்துவர்கள் ஏற்கனவே கூறிய அறிவுறுத்தலின் பேரில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு மலைப்பகுதிக்கு என நியமிக்கப்பட்ட ஆஷா பணியாளர் மின்னலாவை தொடர்பு கொண்டார். உடனே 108 மினி ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து அல்லேரி மலை வரை மினி ஆம்புலன்ஸ் வந்தது. அங்கிருந்து கர்ப்பிணி வீடு வரை செல்ல சாலை வசதி இல்லாததால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை வழக்கம்போல் டோலி கட்டி தூக்கி வந்தனர். தொடர்ந்து அங்கு தயார் நிலையில் இருந்த 108 ஆம்புலன்ஸில் அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பிரசவம் பார்க்கப்பட்டது. அதில் கர்ப்பிணி தீபாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

பிரசவம் முடிந்த நிலையில் வேலூர் பென்லேண்ட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். அல்லேரி மலைக்கு சாலை அமைப்பதில் இழுபறி நீடித்து வருவதால் கர்ப்பிணிகள் நோயாளிகள் இன்னமும் மலைகளில் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே விரைவாக அல்லேரி மலைக்கு சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அல்லேரி பகுதி மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.‌ கர்ப்பிணியை மலைப்பகுதியில் டோலிகட்டி தூக்கி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணி

பீஞ்சமந்தை, பாலாம்பட்டு, ஜார்த்தான்கொல்லை மலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தப்பட்டு அங்கு வசிக்கும் மக்கள் சிரமமின்றி மலையடிவாரத்திற்கு வந்து செல்லும் நிலை இருந்து வருகிறது. அதேபோல் அல்லேரி மலைக்கும் சாலை அமைக்கும் பணிக்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் அவை கிடப்பில் போடப்பட்டதால் அல்லேரி மலைக்கு சாலை அமைப்பது மீண்டும் கேள்விக்குறியாகி உள்ளது.