Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரக்கோணம் அம்மா உணவகத்தில் இட்லி புளிப்பாக தரமற்று உள்ளது: ஆய்வு செய்த கூட்டுறவுதுறை அமைச்சர் தகவல்

அரக்கோணம், ஜூன் 2: அரக்கோணம் அம்மா உணவகத்தில் இட்லி புளிப்பாக தரமற்று உள்ளது என்று ஆய்வு செய்த கூட்டுறவு துறை அமைச்சர் காந்திராஜ் தெரிவித்தார். ராணிப்ேபட்டை மாவட்டம் அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகே அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இங்கு காலை இட்லி, பொங்கல், மதியம் தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவை மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்த அம்மா உணவகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ், நேற்று காலை திடீரென ஆய்வு செய்தார். உணவகம் முழுவதும் சுற்றி பார்த்த அவர், இட்லியை சாப்பிட்டு தரத்தை பரிசோதித்தார்.

பின்னர் அங்கு இருப்பில் வைக்கப்பட்டுள்ள அரிசி, மளிகைபொருட்கள் ஆகியவற்றை பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த பணியாளர்கள், கூலியை உயர்த்தி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் காந்திராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: அம்மா உணவகத்தை ஆய்வு செய்தேன். அங்கு சமைக்கப்பட்ட இட்லி, சாம்பாரை சாப்பிட்டேன். இட்லி புளிப்பாகவும், தரமற்ற நிலையிலும் இருந்தது. அதேபோல் கை கழுவும் இடங்கள், சமையல் செய்யும் இடங்கள் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு இடங்கள் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. அம்மா உணவகம் மேற்கூரை இரும்பு ஷீட்டால் போடப்பட்டுள்ளது. உட்பகுதி சீலிங் தெர்மாகோல் மூலம் மூடப்பட்டுள்ளது.

அந்த தெர்மாகோல் ஆங்காங்கே உடைந்து தொங்கியபடி உள்ளது. இதனால் உணவு சாப்பிட வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. எனவே, அம்மா உணவக சுற்றுப்புற சுகாதாரத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பாதுகாப்பற்ற முறையில் உள்ள மேற்கூரைகளை அகற்றிவிட்டு சிமெண்ட் தளம் போடவேண்டும். அதேபோல் ஏழை, எளிய பொதுமக்களுக்கு தரமானதாகவும், ஆரோக்கியமாகவும் உணவு வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது தாசில்தார் வரலட்சுமி, நகராட்சி ஆணையாளர் ஆனந்தன், சுகாதார அலுவலர் வெயில்முத்து, உதவி பொறியாளர் வினோத்ராஜ், ஓவர்சியர் பிரேம்சுந்தர், சுகாதார அலுவலர் சுதாகர், வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார், விஏஓ முருகன், தவெக நகர செயலாளர் ரமேஷ், ஒப்பந்ததாரர் லட்சுமிபதி உள்ளிட்ட பலர் இருந்தனர்.