Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம்: தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

வேலூர்: தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கப்பட உள்ளதாக தொடக்கக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தொடக்கக் கல்வி இயக்குனர், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பள்ளிக்கல்வி துறையின்கீழ் 37,554 அரசுப்பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அரசு பள்ளிகளை பொருத்தவரை, கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் நாளில்தான் மாணவர் சேர்க்கை தொடங்குவது வழக்கமாக இருந்தது. இந்தச்சூழலில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக, கடந்த 2024ம் ஆண்டு முதல், மார்ச் மாதமே மாணவர் சேர்க்கை தொடங்கப்படுகிறது. இதற்கு பரவலாக பெற்றோரிடம் நல்ல வரவேற்பும் உள்ளது.

இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் வரும் 2026-27ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இன்று தொடங்க உள்ளது. அதற்கேற்ப பள்ளிகளில் உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கன்வாடி மையங்களில் முன்பருவக்கல்வியை நிறைவு செய்யும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அருகே உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை விகிதம் கணிசமான அளவில் அதிகரிக்க வேண்டும்.

அதற்கேற்ப மாணவர் சேர்க்கைக்கான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் எண்ணும் எழுத்தும், காலை உணவுத் திட்டம், ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள், உதவித் தொகைகள் குறித்து பெற்றோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.