Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வேலூர் அருகே பொய்கை சந்தைக்கு கால்நடைகள் வரத்து அதிகரிப்பு: ரூ.1 கோடி விற்பனையால் வியபாரிகள் மகிழ்ச்சி

வேலூர், ஜூலை 1: தமிழகத்தில் குறிப்பிடத்தக்க கால்நடை சந்தைகளில் வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையும் ஒன்று. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்றும் கூடும் இந்த சந்தைக்கு வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, அண்டை மாநிலமான சித்தூர் மாவட்டத்தில் இருந்தும், கறவை மாடுகள், உழவு மாடுகள், எருமைகள், காளைகள், ஜெர்சி இன பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், கோழிகள் என கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. சாதாரணமாக பொய்கை சந்தைக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டு வரப்படுகின்றன. விற்பனை மட்டும் நல்ல சீசன் நேரங்களில் ரூ.1 கோடி வரை நடக்கிறது.

இந்நிலையில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து கால்நடைகள் விற்பனை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது. இதற்கிடையில் நேற்று நடந்த சந்தைக்கு 1500க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இது கடந்த சில வாரத்திற்கு பிறகு அதிகமாக இருந்தது. அதேபோல் மாடுகள் விற்பனை அமோகமாக இருந்தது. ரூ.1 கோடிக்கு வர்த்தகம் நடந்ததால் என்று வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக கால்நடை வியாபாரிகள் கூறியதாவது: கோடைக்காலம் முடிந்தாலும் வெயில் தாக்கம் இன்னும் அதிகமாகவே உள்ளது. இருப்பினும் அடிக்கடி ஓரளவுக்கு மழை பெய்து வருவதால் தீவனம் தட்டுப்பாடு இல்லை. தற்போது பச்சை புற்கள் உள்ளது. இதனால் விவசாயிகள் மாடுகள் வாங்க முன் வர ஆரம்பத்துள்ளனர். இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு 1500க்கு மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வெளியூர், உள்ளூர் வியபாரிகள் அதிகளவில் வர ஆரம்பித்துள்ளதால் ரூ.1 கோடிக்கு வர்த்தகம் அமோகமாக நடந்தது, என்றனர்.